“இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்கு இந்த வீரர் இல்லாதது பெரிய பின்னடைவாக மாறும்” – ஹார்மிசன் கணிப்பு

0
125

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு கடந்த மாதத்திலேயே அணியை அறிவித்து, அபுதாபியில் ஒன்பது நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை அமைத்து, மேலும் அதிரடியாக அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து, இங்கிலாந்து படு வேகமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு கடந்த வாரத்தில் இந்திய அணியை அறிவித்தது. இதில் இஷான் கிசானை தேர்வு செய்யாமல் துருவ் ஜுரலை தேர்வு செய்தது, மேலும் முகமது சமி காயத்தால் இடம் பெறாதது முக்கிய நிகழ்வுகளாக அமைந்தன.

ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடர் என்கின்ற காரணத்தினால் வேகப்பந்துவீச்சாளர்கள் எல்லா போட்டிகளிலும் விளையாடுவது என்பது கடினமான காரியம். இந்த நிலையில் பும்ரா மற்றும் சிராஜுக்கு ஓய்வு தருவதற்கு சமி மாதிரியான ஒரு அனுபவ பந்துவீச்சாளர் தேவை.

தற்போது சமி கணுக்கால் காயத்தின் காரணமாக மறு வாழ்வில் இருந்து வருகிறார். மேலும் அவரது காயம் தொடர்பாக லண்டனில் இருந்து மருத்துவ அறிக்கை எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்தத் தொடர் குறித்து இங்கிலாந்து முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஹார்மிசன் கூறும் பொழுது “இரண்டு அணிகளுமே சிறந்த வேகப் பந்து வீச்சு வரிசையை கொண்டிருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கும். முகமது சமி தற்போதைய காலகட்டத்தில் சிவப்புப்பந்து வெள்ளைப்பந்து என பொதுவாக தலைசிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய மிஸ் ஆகும்.

ஆரம்பத்தில் இந்திய அணி பும்ரா மற்றும் சமி இருவரையும் விளையாட வைக்கும். இதற்கு அடுத்த போட்டிகளில் சமி உள்ளே வரும் பொழுது இந்தியா முழு பலத்தையும் பெறும்.

இதேபோல் கடந்த முறை இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியில் இருக்கிறார். ஆண்டர்சன் தனது திறமையை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதால் மீண்டும் அதே வேலையை இந்தியாவில் செய்யலாம் என்று எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் என செல்லும். மேலும் மார்க் வுட் மற்றும் அட்கிஸ்டன் இருவரில் ஒரு கம்பீரமான பந்துவீச்சாளர் தேவைப்படுவார். இங்கிலாந்து சிறந்த நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை இந்த தொடருக்கு கொண்டு வந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.