பாகிஸ்தான் கிரிக்கெட்டில் காலங்காலமாக ஒரு விஷயத்தை மிகவும் பெருமையாக பேசி வருவதாகவும் ஆனால் தற்போது அந்த விஷயம் அப்படி இல்லை எனவும் மொயின் அலி மிகவும் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
இங்கிலாந்து பாட்காஸ்ட் ஒன்றில் ஆதில் ரஷீத் உடன் கலந்து கொண்ட மொயின் அலி இவ்வாறு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் மிகவும் சரிவில் இருக்கிறது, மேலும் இங்கிலாந்தில் நடைபெறும் 100 பந்து தொடரில் 50 பாகிஸ்தான் வீரர்கள் பெயர் கொடுத்திருந்த பொழுதும் ஒருவரையும் யாரும் வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பெருமை
உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வேகப் பந்துவீச்சாளர்களை தயாரிக்கும் தொழிற்சாலை என்று அழைப்பார்கள். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் சோயப் அக்தர் என கிரிக்கெட் உலகை கலக்கிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறார்கள். ஆசிய கண்டத்தில் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்கிய ஒரே அணியாக பாகிஸ்தான் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போதும் அவர்களிடம் ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுப் என மூன்று பேர் கொண்ட வேகப் பந்து வீச்சு கூட்டணி இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியின் சிறந்த செயல்பாடு காரணமாக முதல்முறையாக ஒரு உலகக் கோப்பை தொடரில் 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த பெருமை இனி பாகிஸ்தானுக்கு இல்லை
இதுகுறித்து பேசி இருக்கும் மொயின் அலி கூறும் பொழுது “பொதுவாகவே பாகிஸ்தான் பின்புலத்தை கொண்ட மக்களுக்கு பாகிஸ்தான் மிகச் சிறந்த சீமர்களை கொண்டிருக்கும் நாடு என்கின்ற கருத்து இருக்கிறது. அங்கு சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அங்கு நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் மிகச் சிறந்தவர்கள் கிடையாது”
இதையும் படிங்க : 2025 ஐபிஎல்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு தீர்ந்த முக்கிய தலைவலி.. கெத்து காட்டும் கம்மின்ஸ்
“தற்போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் என்னை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. என்னை மன்னித்து விடுங்கள் நான் அவர்களை தவறாக பேசவில்லை. அவர்கள் நல்ல பந்துவீச்சாளர்களாக இருக்கலாம் ஆனால் சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






