இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று என கைப்பற்றி அசத்தி இருக்கிறது.
ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. அங்கிருந்து இந்திய இளம் அணி மீண்டும் எழுந்து நான்கு போட்டிகளை தொடர்ந்து வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடும் அணுகுமுறை இந்தியாவில் எடுபடவில்லை. இங்கிலாந்து ஒட்டுமொத்த டெஸ்ட் அணியின் தன்னம்பிக்கையை இது முற்றிலுமாக சீர்குலைத்து இருக்கிறது.
முதல் போட்டியில் சதம் அடித்த ஒல்லி போப், அதே போட்டியில் அரை சதம் அடித்த கேப்டன் ஸ்டோக்ஸ் அதற்குப் பிறகு ஒரு போட்டியில் கூட அரை சதத்தை தொடவில்லை. இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்திருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயமாக இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மற்றும் அந்த அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர்கள் டாம் ஹார்ட்லி மற்றும் சோயப் பஷீர் ஆகியோர் மட்டுமே இருந்திருக்கிறார்கள்.
தோல்வி குறித்து பேசி உள்ள பென் ஸ்டோக்ஸ் கூறும்போது “நாங்கள் முதல் போட்டியில் இருந்தே ஆட்டத்தில் சரியாக இல்லை. நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறோம். நாங்கள் நிறைய போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். இந்தத் தொடரை மொத்தமாக பார்க்கும் பொழுது எங்களுக்கு கிடைத்த சிறிய தருணங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. இந்தத் தொடரில் எங்களுக்கு ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் பொழுது, இந்திய பேட்ஸ்மேன்களும் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். இவர்களை விளையாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான வழிமுறைகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக நீங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் பாசிட்டிவாக இருப்பது சில நேரங்களில் வீழ்ச்சிக்கு கூட வழிவகுக்கும். எங்களுக்கு அதான் நடந்தது.
எங்களுடைய துவக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக இருந்தார்கள். மேலும் எங்களுடைய இளம் சுழற் பந்துவீச்சாளர்கள் இருவரும் இந்த தொடரில் விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டார்கள். ஜோ ரூட் தொடரின் பின்பகுதியில் பேட்டிங்கில் பார்ம்புக்கு வந்திருப்பது கோடைகாலத்திற்கு முன்பாக எங்களுக்கு மகிழ்ச்சி.
இதையும் படிங்க : 400வது வெற்றி.. இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை.. இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி வெற்றி
ஜேம்ஸ் ஆண்டர்சன் உடன் களத்தில் இருப்பது எப்பொழுதும் மகிழ்வான தருணம். ஒரு வேகப்பந்துவீச்சாளர் 700 விக்கெட்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுப்பது என்பது நம்ப முடியாத ஒன்று. அவர் கிரிக்கெட்டை தொடங்கிய நாளிலிருந்து இப்பொழுது வரை அதே ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் இருக்கிறார். நான் பார்த்த சிறந்த வீரர் என்றால் அது அவர்தான்” என்று கூறி இருக்கிறார்.