ENG vs NZ.. 28 ரன்னுக்கு 4 விக்கெட்.. லிவிங்ஸ்டன் காட்டடி.. 26.5 ஓவரில் முடிந்த போட்டி!

0
3203
Livingston

நியூசிலாந்து அணி தற்பொழுது இங்கிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்து, தலா நான்கு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.

இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் இரண்டுக்கு இரண்டு என சமனில் முடிந்தது. இதற்கு அடுத்த நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி சவுத்தாம்டன் மைதானத்தில், மலையால் பாதிக்கப்பட்டு 34 ஓவர் கொண்ட போட்டியாக நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று முதல் முறையாக களம் இறங்கிய டிரண்ட் போல்ட் நியூசிலாந்து அணியின் பிரதான மூன்று விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே வீழ்த்தி, அந்த அணியைச் சரித்தார். 28 ரன்களுக்கு நான்கு விக்கெட்டையும், 55 ரன்னுக்கு ஐந்து விக்கட்டையும் இங்கிலாந்து இழந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த மொயின் அலி 33 ரன்கள் எடுத்து, லிவிங்ஸ்டன் உடன் 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்து வெளியேறினார். அப்பொழுது அணியின் ஸ்கோர் 103. இதற்கு அடுத்து லிவிங்ஸ்டன் உடன் சாம் கரன் ஜோடி சேர்ந்தார். லிவிங்ஸ்டன் கொஞ்சம் கொஞ்சமாக தனது அதிரடியை ஆரம்பித்தார்.

இந்த போட்டியில் எப்படியும் இங்கிலாந்து தோற்றுவிடும் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில், இந்த ஜோடி அதிரடியாக விளையாடி 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தது. சாம் கரன் 35 பந்தில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் உடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த டேவிட் வில்லி ஆட்டம் இழக்காமல் ஏழு ரன்கள் எடுத்தார். ஒருமுனையில் நங்கூரம் இட்டு நின்று, அதிரடியில் பட்டையைக் கிளப்பிய லிவிங்ஸ்டன் ஆட்டம் இழக்காமல், 78 பந்துகளில் ஒன்பது பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 95 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 34 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் டிரண்ட் போல்ட் ஏழு ஓவர்களுக்கு 37 ரன் கொடுத்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு, கடந்த போட்டியில் அதிரடியாக சதம் அடித்த டேரில் மிட்சல் மட்டுமே தாக்குப்பிடித்து 52 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். மீதி யாரும் அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இவருக்கு அடுத்தபடியாக வில் யங் 32 ரன்கள் சேர்த்தார். 26.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு நியூசிலாந்து சுருண்டு 79 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி மற்றும் ரீஸ் டாப்லி இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினர். மொயின் அலி இரண்டு விக்கெட் வீழ்த்தினார். தற்பொழுது 4 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கிறது!

- Advertisement -