ENG vs BAN.. 24.1 ஓவரில் அதிரடி சேஸ்.. மொயின் அலி மிரட்டல் அடி.. பங்களாதேஷை எளிதாக வீழ்த்தியது இங்கிலாந்து!

0
2992
Moeen

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேச அணி பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. பங்களாதேஷ அணி தனது முதல் பயிற்சி போட்டியில் இலங்கை அணியை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் தன்ஷித் ஹசன் 45, மெகதி ஹசன் 74 ரன்கள் எடுத்தார்கள். இவர்களுக்கு அடுத்து அதிகபட்சமாக மகமதுல்லா 18 ரன்கள் எடுத்தார்.

மழை குறுக்கிட்ட இந்த போட்டியில் 37 ஓவர்களாக நடத்தப்பட்டது. பங்களாதேஷ் அணி 37 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருக்க, இங்கிலாந்து அணிக்கு இலக்காக 37 ஓவர்களில் 197 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து வழக்கம் போல அதிரடியில் மிரட்டியது. ஜானி பேர்ஸ்டோ 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டேவிட் மலான் இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அடுத்து வந்த ஹாரி புரூக் 17, கேப்டன் ஜோஸ் பட்லர் 15 பந்துகளில் 30 ரன்கள் என எடுத்து வெளியேறினார்கள். அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ஏழு ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து 13.2 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தது.

இதற்குப் பிறகு ஜோ ரூட் உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் ஒரு முனையில் பொறுமையாக விளையாட, இன்னொரு முனையில் மொயின் அலி அதிரடியில் நொறுக்கி தள்ளினார். 37 பந்துகளில் அரை சதம் அடித்த அவர், 39 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஜோ ரூட் 26, கிரீஸ் வோக்ஸ் 1 எனக் களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர். இங்கிலாந்து அணி 24.1 ஓவரில் 197 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து இங்கிலாந்து அணி உலகக்கோப்பை துவக்க ஆட்டத்தில் ஐந்தாம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகிறது!