4 வருட சோதனைக்கு முற்றுப்புள்ளி.. 5வது முறை ஆஸி சோகம்.. இந்தியா மாஸாக தொடரை கைப்பற்றியது!

0
6479
ICT

இந்திய அணி கே.எல்.ராகுல் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்று கைப்பற்றி இருக்கிறது.

இன்று மத்திய பிரதேஷ் இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் டாஸ் இழந்து பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ரன் இதுவாகும்.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் ருதுராஜ் 8, கில் 104, ஸ்ரேயாஸ் 105, கேஎல் ராகுல் 52, இஷான் கிஷான் 31, சூரியகுமார் யாதவ் 71, ரவீந்திர ஜடேஜா 13 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா தரப்பில் கேமரூன் கிரீன் பத்து ஓவர்களில் 103 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி 9 ஓவர்களில் இரண்டு விக்கெட்டை இழந்து இருந்த பொழுது, மழை வந்து ஆட்டத்தை நிறுத்தியது. இதை எடுத்து டக்வோர்த் லிவீஸ் விதிப்படி 33 ஓவர்களில் 317 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

மாற்றி அமைக்கப்பட்ட இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி 217 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா தரப்பில் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சீன் அப்பாட் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 54 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். டேவிட் வார்னர் 53 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் பெரிதான ரன் பங்களிப்பை தரவில்லை.

இந்திய அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழு ஓவர்களில், 41 ரன்கள் தந்து, மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு அடுத்து ரவீந்தர ஜடேஜா 5.2 ஓவர்கள் பந்துவீசி 42 ரன்கள் தந்து, மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்திய அணி கடந்த நான்கு வருடமாக உள்நாட்டிலும் சேர்த்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றாமல் இருந்தது. தற்பொழுது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது முறையாக ஆல் அவுட் ஆகியிருக்கிறது.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் அணிக்கு திரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. 28ஆம் தேதி உலகக்கோப்பை இந்திய அணி அறிவிக்கப்படுகிறது!