பாகிஸ்தான் பவுலிங் எப்படி? “அந்த 4 லெட்டர் வார்த்தை என் வாயில வருது.. ஆனா எல்லாரும் இருக்கீங்கன்னு பாக்றேன்” – பிரஸ் மீட்டில் ராகுல் டிராவிட் கலகல!!

0
47

சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராகுல் டிராவிட் கலகலப்பாக சில பதில்களை அளித்திருக்கிறார்.

ஆசிய கோப்பை தொடரின் 15 வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இரு அணிகளும் மோதின. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றுவிட்டது.

இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் பரபரப்பு உச்சத்தை தொட்டது. அதேபோல் இந்த சுற்றிலும் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி பரபரப்பின் உச்சத்தில் இருக்கலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ராகுல் டிராவிட், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜடேஜா காயம் எப்படி இருக்கிறது? அவர் டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறுவாரா? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். “இந்திய அணியின் மருத்துவ குழுவினரால் ஜடேஜா தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறார். டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஆறு முதல் ஏழு வாரங்கள் இருக்கின்றன. ஆகையால் தற்போது எதுவும் கூற இயலாது. மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு முழு அறிக்கை வெளியிடப்படும். அப்போதுதான் அவருக்கு இன்னும் எத்தனை நாட்கள் ஓய்வு தேவை என்பது வெளியிடப்படும். யாரும் அதற்குள் எந்தவித முடிவுக்கு வர வேண்டாம். எங்களாலும் தற்போது எதுவும் கூற இயலாது.” என்று பதில் அளித்தார்.

அதன் பிறகு பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மற்றும் இந்திய அணியின் பந்துவீச்சு இரண்டையும் ஒப்பிட்டு பேசிய ராகுல் டிராவிட், யாருடைய பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது என்பது குறித்தும் பதில் அளித்தார். “பாகிஸ்தானியின் பந்துவீச்சு மீது நான் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். இந்திய அணியின் பந்துவீச்சும் நன்றாக இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் இந்திய அணியின் பந்துவீச்சு பல்வேறு வெற்றிகளை பெற்று தந்திருக்கிறது. சிறந்த வீரர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது முக்கியமில்லை. போட்டியின் முடிவுகள் தான் யார் சிறந்தவர்கள் என்பதை நிர்ணயிக்கும். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பற்றி நான் நினைக்கும் வார்த்தையை நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்பதால் என்னால் பேச இயலாது. ‘எஸ்’ என்ற லெட்டரில் துவங்கும் 4 எழுத்து கொண்ட வார்த்தையை என்னால் பொதுவெளியில் கூற இயலாது.” என கூறிவிட்டு ராகுல் டிராவிட் கலகலவென்று சிரித்தார்.

“நிச்சயமாக இந்திய அணியின் பந்துவீச்சு நல்ல முடிவுகளை பெற்று தந்திருக்கிறது. ஆகையால் வருகிற போட்டிகளிலும் நான் அதையே எதிர்பார்க்கிறேன்.” என்று பெட்டி அளித்தார்.

ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாதியிலேயே காயம் காரணமாக விலகிய ஜடேஜாவிற்கு மாற்று வீரராக சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே ஆசிய கோப்பை இந்திய அணியின் ரிசர்வ் வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.