கடந்த சில நாட்களாக ஐபிஎல் வட்டாரத்தில் யாரும் எதிர்பார்க்காத ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் இன்னும் ஆச்சரியம் என்னவென்றால் அந்த விஷயம் ஒரு முடிவுக்கு வந்தபாடு கிடையாது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த அணியை விட்டு வெளியேறி தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்கிறார் என்கின்ற தகவல், ஐபிஎல் வட்டாரத்திலிருந்து இணையத்தை பெரிய அளவில் ஆக்கிரமித்தது.
நேற்றைய நாளில் அவர் குஜராத் அணியால் தக்கவைக்கப்பட்டார். ஆனால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 15 கோடிக்கு மாற்றப்பட்டு விட்டார் என ஆங்கிலத்தில் பிரபலமான கிரிக்கெட் இணையதளங்கள் எல்லாவற்றிலும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இந்த தகவல்களை இரண்டு அணி நிர்வாகங்களும் இதுவரை உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இதன் அடிப்படையில் பார்த்தால் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.
எப்படி எடுத்துக் கொண்டாலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக வந்து கோப்பையை வென்றதோடு, அங்கிருந்து இந்திய டி20 அணிக்கும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக உயர்ந்தார். இப்படியான நிலையில் அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு சாதாரண வீரராக வருவது, அவருக்கு தனிப்பட்ட முறையில் பின்னடைவாகவே எல்லோராலும் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியா எதற்காக குஜராத்தை விட்டு வெளியேற வேண்டும்? இது அவருடைய தனிப்பட்ட கேப்டன் தொழில் முறைக்கு சரியானதாக தெரியவில்லை. அவர் குஜராத்துக்கு சென்று கேப்டன் ஆனதோடு, அங்கிருந்து இந்திய அணிக்கும் கேப்டன் ஆகிவிட்டார்.
ஆனால் இப்பொழுது அவர் குஜராத் அணியின் கேப்டனாக இல்லை. மேலும் மும்பை அணியிலும் அவர் கேப்டனாக இருக்க மாட்டார். அப்படி என்றால் அவர் இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்க நினைக்கக் கூடாது.
நீங்கள் எந்த கோணத்தில் இந்த விஷயத்தை எடுத்து பார்த்தாலும் சரியாக தெரியவில்லை. நீங்கள் உங்கள் ஐபிஎல் அணிக்கு கேப்டன் இல்லை. ஆனால் நீங்கள் இந்திய டி20 அணிக்கு உலக கோப்பையில் கேப்டனாக இருக்க விருப்பப்படுகிறீர்கள். இது நிச்சயமாக சரியான ஒன்று கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!