வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 250 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்த நிலையில், அந்த தோல்வியைக் கண்டு பயந்து அணியின் பிளேயிங் லெவனை உடனடியாக மாற்றக் கூடாது என்றும், அதே பிளேயிங் லெவனுடன் தொடர வேண்டும் என்றும் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி லக்னோவில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற அதே பிளேயிங் லெவனுடன் தான் ராஞ்சி போட்டியிலும் களம் இறங்கியது. இருப்பினும், அணியில் இரண்டு ஃபாஸ்ட் பௌலர்கள் மற்றும் மூன்று ஆல்ரவுண்டர்கள் மட்டுமே இருந்தது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் பெஞ்ச்சில் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் பிரின்ஸ் யாதவ் போன்ற பந்துவீச்சு ஆப்ஷன்கள் தயாராக உள்ளனர்.
இருப்பினும், இந்திய அணி உடனடியாக அவசரப்பட்டு மாற்றங்களைச் செய்யக் கூடாது என்று தினேஷ் கார்த்திக் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணி ஏற்கனவே ஒரு வலுவான பிளேயிங் லெவனுடன் தான் விளையாடி வருகிறது என்றும், ஒரே ஒரு தோல்விக்காக அணியில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசும்போது “அவர்களுக்குத் தேவை என்று கருதினால் கூடுதல் ஃபாஸ்ட் பௌலரை சேர்க்கப் பார்ப்பார்களா? ஒருவேளை ஸ்பின்னர்களில் ஒருவருக்குப் பதிலாக பிரின்ஸ் யாதவை கொண்டு வரலாம். அதே சமயம், உண்மையாகச் சொன்னால், நான் இந்திய டிரஸ்ஸிங் ரூமில் இருந்திருந்தால், விஷயங்களை அதிக அளவில் மாற்றி இருக்க மாட்டேன். அவர்கள் ஒரு வலுவான பிளேயிங் லெவனுடன் தான் விளையாடி வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்”
“நிச்சயமாக நீங்கள் நிதீஷ் குமார் ரெட்டியை விளையாட வைக்க விரும்பினால், வேறு யாரையும் எப்படி அணியில் சேர்க்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் யாருக்காவது ரெஸ்ட் கொடுத்து, அதற்கான தகவல் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டால் ஒழிய, இந்த ஒரு போட்டியின் முடிவை மட்டும் வைத்து நீங்கள் ஏன் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.” என்று கூறி இருக்கிறார்.






