நேற்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கடைசி ஓவரில் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியமான காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் யாஸ் தயால் குறித்து அந்த அணியின் மென்டர் தினேஷ் கார்த்திக் பாராட்டி பேசி இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணியால் 211 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்த சிஎஸ்கே கடைசி இரண்டு ஓவர்களில் சொதப்பி வெற்றியை இழந்தது.
கடந்த வருட ஞாபகம்
கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக்கொண்ட கடைசி போட்டியில் யாஸ் தயால் கடைசி ஓவரில் சிறப்பான முறையில் பந்துவீசி தோனி விக்கெட்டை கைப்பற்றி போட்டியை வென்றதோடு, சுற்றில் இருந்து சிஎஸ்கே அணியை பிளே ஆப் முன்னேற முடியாமல் வெளியேற்றி ஆர்சிபி அணியை உள்ளே கூட்டி சென்றார்.
இந்த வருடமும் கடைசி ஓவரில் தோனியின் விக்கெட்டை கைப்பற்றி தங்கள் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். மேலும் இந்த கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆர் சி பி அணியை வெற்றி பெற வைத்தார். இரண்டு முறை தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றியை கடைசி ஓவரில் கொண்டு வந்ததால் ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பாராட்டி வருகிறார்கள்.
யாஸ் தயால் இப்படிப்பட்டவர்தான்
இந்த நிலையில் யாஸ் தயால் குறித்து பேசி இருக்கும் ஆர் சி பி அணியின் மென்டர் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “யாஸ் தயாலைப் பொருத்தவரை அவருடைய பணி நெறிமுறை மிகவும் சிறப்பாக இருக்கும். இதில் இந்தியாவில் இருக்கும் சிறந்த வீரர்கள் சிலருடன் அவரும் இருக்கிறார். இளம் கிரிக்கெட் வீரர்களிடம் நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் திரைக்குப் பின்னால் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதைத்தான். யாஸ் தயார் மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர்”
இதையும் படிங்க : டிகே குடுத்த ஒரு வேலைதான் காரணம்.. சிஎஸ்கேவ நொறுக்க இந்த பிளான்தான் போட்டோம் – ரொமாரியோ ஷெப்பர்ட் பேச்சு
“அவர் எப்பொழுதும் விடாமுயற்சியுடன் இருப்பவர். அவர்தான் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒரு பேப்பரில் எழுதி வைத்து அதை அப்படியே செய்பவர். ஒரு சில நேரங்களில் கடைசி ஓவர்கள் வீசும் பொழுது அதில் ஏற்ற இறக்கங்கள் வரத்தான் செய்யும். ஆனால் யாஸ் தயாலின் முயற்சியில் எந்த ஏற்ற இறக்கமும் இருக்காது. அவர் எப்பொழுதும் அணிக்காக தன்னுடைய 200 சதவீதத்தை கொடுக்கக் கூடியவர்” என்று பாராட்டியிருக்கிறார்.






