” இந்த தமிழக வீரரை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் இருக்க முடியாது ” – கபில் தேவ் பாராட்டு

0
327
Kapil Dev

கடந்த ஐ.பி.எல் சீசனில் பல ஆச்சரியமான நிகழ்வுகள் நடந்தது. அதில் முக்கியமானது புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிகச்சிறப்பான செயல்பாடு. அந்த அணி ஆரம்பத்தில் வென்றது ஆச்சரியம் என்றால், கோப்பையை வென்ற பேராச்சரியத்தை ஐ.பி.எல் கிரிக்கெட் இரசிகர்களுக்கு உண்டாக்கியது.

இதற்கு சமமான ஆச்சரியத்தையும் கூடவே மகிழ்ச்சியையும் இந்திய கிரிக்கெட் இரசிகர்களுக்கு வழங்கிய இன்னொரு அம்சம் எதுவென்றால்; அது 37 வயதான தினேஷ் கார்த்திக் அசுரத்தனமான பேட்டிங் பார்மிற்கு வந்து, பெங்களூர் அணிக்காக பேட்டிங் பினிசிங் ரோலில் கலக்கியதுதான்.

- Advertisement -

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் பினிசராய் களமிறங்கி 16 போட்டிகளில் 330 ரன்களை அடித்த அவரின் பேட்டிங் ஸ்ட்ரைக்ரேட் 183 என்பதுதான் மிகப்பெரிய விசயம். அவர் பந்தின் லைன் மற்றும் லென்த்தை கணிக்கும் வேகம் பிரமிப்பாக இருக்கிறதென்று, உலக கிரிக்கெட்டின் பேட்டிங் மாஸ்டரான சச்சினே வியக்கும் அளவுக்கு விளையாடினார்.

அதிலும் ஆட்டத்தின் இறுதி நேரங்களில் மரபான வழக்கமான கிரிக்கெட் ஷாட்ஸ்கள் இல்லாமல், ரேம்ப், ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்கூப் என மாடர்ன் கிரிக்கெட் ஷாட்ஸ்களிலும் கலக்கினார். ஒவ்வொரு பவுலருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டான்ஸ் எடுத்து வெளுத்து வாங்கினார். இதனால் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடி வருகிறார். முதல் ஆட்டத்தில் இரு பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், இரண்டாம் ஆட்டத்தில் 21 பந்துகளில் 30 ரன்களை நெருக்கடியான நேரத்தில் விளாசினார்.

தினேஷ் கார்த்திக் பற்றி பேசியுள்ள ஆல்ரவுண்டர் ஜாம்பவான் முன்னாள் வீரர் கபில் தேவ் “என்னை உங்களால் புறக்கணிக்கவே முடியாது பாருங்கள் என்று தேர்வாளர்களை தினேஷ் கார்த்திக் கட்டாயப்படுத்தினார். ரிஷாப் பண்ட் இளம் வீரர். அவருக்கு கிரிக்கெட் விளையாட நிறைய காலம் உள்ளது. தினேஷ் கார்த்திக்கிற்கு அனுபவம் மற்றும் செயல் திறன் உள்ளது. இதனால்தான் தினேஷ் கார்த்திக்கிற்கு தரப்படும் எந்தப் பாராட்டுகளும் போதாது என்று சொல்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் “தோனிக்கு முன்பிருந்து இவர் கிரிக்கெட் விளையாடி வருகிறார். தோனி ஓய்வு பெற்று இரண்டாண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கார்த்திக் தனது உத்வேகத்தை அதேயளவில் வைத்துள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு அதேயளவில் ஆர்வத்தோடும், கிரிக்கெட்டை நேசிப்பதும் கடினமானது. தினேஷ்கார்த்திக் மற்ற எல்லாரையும் விட முன்னணியில் உள்ளார். அவர் எத்தனைப் பந்துகளைச் சந்தித்தாலும் அவரால் ரன்கள் கொண்டுவர முடிவதை நாம் ஐ.பி.எல் போட்டிகளில் பார்த்தோம்” என்று கூறியிருக்கிறார்!