என்னால் 100 டெஸ்ட் போட்டிகள் ஆடமுடியும் என்று நினைக்க வைத்த போட்டி எது? அதுக்கு அப்புறம் தான் என்னோட 2.0 துவங்கியது! – 100ஆவது டெஸ்ட்டுக்கு முன்பு பேசிய ஸ்டீவ் ஸ்மித்!

0
1289

இந்த ஒரு டெஸ்ட் போட்டி தான் என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு நானும் 100 டெஸ்ட் போட்டிகளை விளையாட முடியும் என்று நம்பினேன் என்று மனம் திறந்து பேசினார் ஸ்டீவ் ஸ்மித்.

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடக் கூடியவர் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய வீரராக இருந்தாலும், அவரது சொந்த மண்ணை தாண்டி இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என பல்வேறு நாடுகளில் தன்னுடைய சதத்தின் மூலம் கால் பதித்தவர் ஸ்டீவ் ஸ்மித்.

- Advertisement -

டெஸ்ட் அரங்கில் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 9,113 ரன்கள் மற்றும் 32 சதங்கள், 37 அரைசதங்கள் விளாசியுள்ளார். இவரது சராசரி கிட்டத்தட்ட 60 ஆகும். டெஸ்டில் 9000 ரன்கள் மைல்கல்லை 174 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளார். இது அதிவேகமாகவும் இருக்கிறது.

சர்வதேச டெஸ்டில் 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான இவர், தனது முதல் சதத்தை 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்தார். இதுவரை 32 சதங்கள் விலாசி உள்ளார். தன்னுடைய கடைசி சதத்தை கடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக லாட்ஸ் மைதானத்தில் அடித்தது குறிப்பிடத்தக்கது.

99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித், தனது நூறாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்து வரவுள்ள லீட்ஸ் மைதானத்தில் விளையாட உள்ளார். இப்போட்டிக்கு முன்பு 100ஆவது டெஸ்ட் போட்டி விளையாடவுள்ள மகிழ்ச்சியை மற்றும் இதுவரை கடந்து வந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் ஸ்டீவ் ஸ்மித்.

- Advertisement -

“தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக என்னுடைய நான்காவது சதத்தை அடிக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று எனக்கு சுத்தமாக நம்பிக்கையோ, எண்ணமோ இல்லை. டெல் ஸ்டெயின், மார்க்கெல் பிலாந்தார், மெக்லாரென் ஆகியோர் பந்துவீச்சை எதிர்கொண்டு சதம் அடித்தது மிகுந்த நம்பிக்கை கொடுத்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இவர்கள் எத்தகைய சிறப்பானவர்கள் என்பதை உலகறியும். அந்த போட்டியில் சதம் அடித்த பிறகு மிகுந்த நம்பிக்கையை பெற்று அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடினேன்.

அதுவரை இல்லாத அளவிற்கு மிகுந்த நம்பிக்கையை அந்தப் போட்டி கொடுத்தது. அதன் பிறகு என்னுடைய கிரிக்கெட்டை நான் மிகவும் என்ஜாய் செய்தேன். தொடர்ச்சியாக சிக்கலான சூழல்களை எதிர்கொண்டு ரன்குவிக்கும் மனப்பாங்கை வளர்த்துக்கொண்டு என்ஜாய் செய்து வருகிறேன்.

ஆஸ்திரேலிய அணிக்கு எவ்வளவு தூரம் விளையாடுவேன் என்று நான் நினைப்பதில்லை. ஒவ்வொரு போட்டியையும் அணுகி வருகிறேன். அந்த குறிப்பிட்ட போட்டியில் என்ன பங்களிப்பை கொடுக்க முடியும்? வெற்றிக்கு என்னென்ன செய்ய முடியும்? என்பதை செய்து வருகிறேன். என்னுடைய அடுத்த இலக்கு அடுத்து வரவிருக்கும் போட்டி மட்டுமே. என்னுடைய எதிர்காலம் பற்றி இதுவரை நான் சிந்திக்கவில்லை.” என்றார்.