சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி அணிக்கு தன்னால் எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்றும், குறிப்பிட்ட ஒரு விஷயத்தை செய்யவில்லை என்றால் தான் அணிக்கு பயனற்றவனாக ஆகிவிடுவேன் எனவும் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வழக்கம்போல் களத்தில் கேப்டனுக்கு ஆலோசனைகள் கூறியும், சூரியகுமார் யாதவை அருமையான ஸ்டெம்பில் மூலம் வெளியேற்றியும் தோனி அணிக்கு தன் பங்கை செலுத்தி இருந்தார்.
தோனி ஓய்வு பெறுவது எப்போது?
இந்த நிலையில் இந்த வருடம் தோனிக்கு ஐபிஎல் தொடரில் கடைசி வருடமாக இருக்கும் என பலரும் பேசி வரும்போது, தான் விரும்பும் வரையில் விளையாட நினைப்பதாகவும், தற்போது விளையாடி முடித்துவிட்டு அடுத்த எட்டு மாதங்கள் எப்படி செல்கிறது என்பதை பார்த்து அடுத்த வருடத்தை முடிவு செய்வேன் எனவும் தோனி கூறி இருக்கிறார்.
இதன் மூலம் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்கின்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. மேலும் தான் விளையாட விரும்பும் வரையில் தன்னுடைய அணி நிர்வாகம் தன்னை விளையாட அனுமதித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். தற்போது சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனி ஓய்வு பெற்று விடுவார் என்கின்ற பயம் இல்லாமல் சூழ்நிலை மாறி இருக்கிறது.
நான் பயனற்றவனாக ஆகிவிடுவேன்
இந்த நிலையில் விக்கெட் கீப்பிங் குறித்து பேசி இருக்கும் தோனி “இது ஒரு சவால் ஆனது. மேலும் இது சுவாரசியமானது. மேலும் நான் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றால் காலத்தில் பயன் அற்றவனாக ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன். நான் விக்கெட் கீப்பராக இருக்கும் பொழுது ஆட்டத்தை நன்றாக ரீட் செய்ய முடியும். பவுலர் எப்படி பந்து வீசுகிறார்? விக்கெட் எப்படி இருக்கிறது? பீல்டர்களின் கோணங்கள் சரியாக இருக்கிறதா? என்பதையெல்லாம் கவனித்துக் கொள்ள முடியும்”
இதையும் படிங்க : சிஎஸ்கே உடன் தோல்வி.. பும்ரா எப்போது வருகிறார்? – மும்பை பவுலிங் கோச் கவலையான செய்தி
“புதிய பந்தின் முதல் 6 ஓவர்களில் விக்கெட் வித்தியாசமாக நடந்து கொள்கிறது. இதற்குப் பிறகு விக்கெட் மாறிவிட்டதா அல்லது அப்படியே இருக்கிறதா, உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கேப்டனுக்கு தெரிவிப்பதற்கு நான் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டியது இருக்கிறது. நான் விக்கெட் கீப்பராக இருக்கும் பொழுது இதையெல்லாம் வேறுபடுத்தி என்னால் பார்க்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.