தோனியால்தான் இர்பான் பதான் கிரிக்கெட் கேரியர் முடிந்தது ; ரசிகரின் குற்றச்சாட்டுக்கு இர்பான் பதான் பதில்!

0
3743
Irfan

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் என்றால் மூன்றே மூன்று பெயர்களைத்தான் சொல்ல முடியும். அப்போது கபில்தேவ், இப்போது ஹர்திக் பாண்டியா, நடுவில் இருப்பவர் பரோடா அணிக்காக விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான்!

19 வயதில் 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இர்பான் பதான் அறிமுகமானார். ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2004ஆம் ஆண்டு அறிமுகமானார். டி20 போட்டியில் 2006ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அறிமுகமானார். இவரது கடைசி சர்வதேச போட்டி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டியாக அக்டோபர் இரண்டாம் தேதி 2012ஆம் ஆண்டு அமைந்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு பெரிய குறையாக இருந்த ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் குறையை போக்கியவர் இர்பான் பதான். இடது கை வேகப்பந்து வீச்சோடு, இடது கை பேட்டிங்கும் செய்யக் கூடியவராக அதிரடியாக விளையாட கூடியவராக இருந்தார். மேலும் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தானில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தியவர். இவரது ஸ்விங் பந்துவீச்சை பார்த்து அடுத்த வாசிம் அக்ரம் இவர்தான் என்கின்ற பேச்செல்லாம் இருந்தது.

இந்திய அணிக்கு ஒரு ஆல்ரவுண்டர் ஆக ஏழாமிடத்தில் விளையாடக்கூடிய மிகப்பொருத்தமான வீரராக இர்பான் பதான் இருந்தார். ஆனால் விதி அவரது கிரிக்கெட் வாழ்க்கையை அவரது இருபத்தி ஒன்பதாம் வயதோடு முடித்து வைத்து விட்டது பெரும் கொடுமை.

தற்போது ட்விட்டரில் ஒருவர் ” தற்போது நடக்கும் லீக்குகளில் இர்பான் பதான் விளையாடுவதை பார்க்கும் பொழுது தோனியையும் அவரது நிர்வாகத்தையும் அதிகமாக சபிக்கிறேன். என்னால் நம்ப முடியவில்லை அவர் கடைசியாக விளையாடிய வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டியின் போது அவரது வயது வெறும் இருபத்தி ஒன்பது. எந்த ஒரு அணிக்கும் நம்பர் ஏழாம் இடத்தில் அவர் பொருத்தமான வீரர். ஆனால் இந்தியா ஜட்டு மற்றும் பின்னியை வைத்து விளையாடியது ” என்று வேதனையாக குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்த ரசிகரின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள இர்ஃபான் பதான் “யாரையும் குறை சொல்லாதீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி” என்று ட்வீட் செய்து இருக்கிறார். தற்போது சமூக வலைதளத்தில் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. இர்பான் பதான் தற்போது லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!