இந்திய கிரிக்கெட்டில் கபில் தேவுக்கு பிறகு மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா கிடைத்தார்.
ஆனாலும் அவருக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட மோசமான காயத்தின் காரணமாக 2019 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருந்தார். மீண்டும் கிரிக்கெட்டுக்குள் 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்குள் வந்தும் அவரால் காயத்தில் இருந்து மீள முடியவில்லை.
இப்படியான காலக்கட்டத்தில் மும்பையைச் சேர்ந்த மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபே இந்திய அணியில் அதிரடியாக வாய்ப்பு பெற்றார். ஆனால் அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பை அவரால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதற்கு நடுவே ஹர்திக் பாண்டியா மீண்டும் திரும்ப வந்துவிட்டார்.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட சிவம் துபே கிரிக்கெட் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்வாகம் சிறந்த முறையில்மாற்றி உருவாக்கியது.
மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் அடைய இந்திய அணியில் தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற, இந்த போட்டியில் பந்துவீச்சில் இரண்டு ஓவர்கள் பந்து வீசி ஒன்பது ரன்கள் மட்டும் விட்டு தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். மேலும் பேட்டிங்கில் வந்து 40 பந்துகளை சந்தித்து ஆட்டம் இழக்காமல் 60 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். அவருக்கு இது இரண்டாவது சர்வதேச டி20 அரை சதம் ஆகும்.
இந்த நிலையில் போட்டி முடிந்ததும் சுரேஷ் ரெய்னா சிவம் துபேவை பேட்டி கண்டார். இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டியின் போது சுரேஷ் ரெய்னா “நீங்கள் இன்று இரவு பந்து வீசியதை மகி பாய் பார்த்திருந்தால், வருகின்ற ஐபிஎல் சீசனில் உங்களுக்கு மூன்று ஓவர்களை ஒதுக்கப் போகிறார்” என்று கூறினார்.
இதைக் கேட்ட சிவம் துபே உடனடியாக “மகி பாய் தயவுசெய்து ரெய்னா பாய் சொல்வதைக் கேளுங்கள்” என்று நகைச்சுவையாக பதில் அளித்தார். இந்தச் சம்பவம் போட்டிக்கு பிறகு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்தது!