மகளிர் ஐபிஎல்: 4,6,6,4,4,6.. கடைசி வரை போராடிய சினே ராணா.. தொடரை விட்டு வெளியேறிய நடப்பு சாம்பியன் ஆர்சிபி

0
493

மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. யுபி வாரியர்ஸ் அணி ஏற்கனவே எலிமினேட் ஆன நிலையில், இந்த போட்டி ஆர்சிபி அணிக்கு வாழ்வா சாவா ஆட்டமாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் யுபி வாரியர்ஸ் அணி சார்பாக கிரேச் ஹாரிஸ் – ஜியார்ஜியா வோல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில், கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த கிரண் – ஜியார்ஜியா கூட்டணி பின்னி பெடல் எடுத்தது.

- Advertisement -

சிறப்பாக ஆடிய ஜியார்ஜியா அரைசதம் கடந்து அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். இன்னொரு பக்கம் கிரண் சிக்சர்களை விளாசி தள்ளினார். அதிரடியாக ஆடிய கிரண் 16 பந்துகளில் 5 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி வரை களத்தில் இருந்த ஜியார்ஜியா வோல் 56 பந்துகளில் ஒரு சிக்ஸ், 17 பவுண்டரி உட்பட 99 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.

ஏமாற்றிய ஸ்மிருதி மந்தனா

- Advertisement -

இதனால் யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு மேகனா – ஸ்மிருதி மந்தனா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஸ்மிருதி 4 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக தொடங்கிய மேகனா 12 பந்துகளில் 27 ரன்கள் விளாசி வெளியேறினார்.

இதன்பின் வந்த எல்லீஸ் பெரி 28 ரன்களிலும், ராகவி 14 ரன்களிலும், கனிகா 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் சென்றனர். ஒருபக்கம் தனியாக அதிரடி காட்டிய ரிச்சா கோஷ் 33 பந்துகளில் 5 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 69 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆர்சிபி அணி 16.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்திருந்தது.

ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசல்

ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 43 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது தீப்தி சர்மா வீசிய 19வது ஓவரில் ஸ்னே ராணா 4,6,6,4,6 என்று விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் குவிக்கப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த சூழலில், கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரின் 3வது பந்திலேயே ரேணுகா சிங் ரன் அவுட்டாக, ஆர்சிபி அணி 19.3 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் யுபி வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணி இந்த தோல்வியால் எலிமினேட் ஆகி இருக்கிறது. மேலும் டெல்லி அணி முதலிடத்திலும், குஜராத் அணி 2வது இடத்திலும், மும்பை அணி 3வது இடத்தில் இருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

- Advertisement -