தற்போது இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கேப்டன்சி மோசமாக இருப்பதாக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் விமர்சனம் செய்திருக்கிறார்.
மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தற்பொழுது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெரும்பகுதி வெல்வதற்கான வாய்ப்பில் இருந்த ஆஸ்திரேலியா தற்பொழுது தோல்வி முகத்தில் இருக்கிறது.
மீண்டெழுந்த தென் ஆப்பிரிக்க அணி
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த அணி 70 ரன்கள் எடுத்திருந்தபொழுது இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதைத் தொடர்ந்து எளிதாக ஆஸ்திரேலியா அணி இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்படியான நிலையில் ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்ரம் மற்றும் டெம்பா பவுமா இருவரும் சேர்ந்து, நேற்று மூன்றாவது நாளின் முடிவு வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். தற்போது அந்த அணியின் கையில் எட்டு விக்கெட்டுகள் இருக்க வெற்றிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே தென் ஆப்பிரிக்க அணி முதல்முறையாக ஐசிசி தொடர் ஒன்றை வெல்லப்போவது உறுதியாகி இருக்கிறது.
டேல் ஸ்டெய்ன் விமர்சனம்
இதுகுறித்து பேசி உள்ள டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது ” நேற்று பேட் கம்மின்ஸ் கேப்டன்சி எனக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ஆட்டத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பந்து மூன்றாவது நாளில் மிகவும் கீழாக வந்தது. குறிப்பாக ஸ்லிப் பகுதிக்கு பந்து நல்ல முறையில் செல்லவில்லை. பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்காவில் பந்து ஸ்லிப் பகுதிக்கு நல்ல முறையில் செல்லும்”
இதையும் படிங்க : 6 பந்து 9 ரன்.. பொல்லார்டின் அலட்சியம்.. கலக்கிய சூப்பர் கிங்ஸ்.. மும்பை பரிதாப தோல்வி
“அதே சமயத்தில் இந்தியாவில் விளையாடும் பொழுது பந்து பெரிய அளவில் ஸ்லிப் பகுதிக்கு பயணிக்காது என்பதால், ஷார்ட் கவர் மற்றும் ஷார்ட் மிட் விக்கெட் பகுதிகளில் பீல்டர்கள் இருப்பார்கள். நேற்று பந்து கீழாக வந்த காரணத்தினால் கம்மின்ஸ் இந்தப் பகுதியில் இரண்டு பீல்டர்களை வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் கேட்ச் வாய்ப்புள்ள இடத்தில் பீல்டர்களை வைக்காமல், வெளியில் பவுண்டரிகளை தடுப்பதற்காக பீல்டர்களை வைத்து தவற விட்டுவிட்டார்” என்று கூறி இருக்கிறார்.






