சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் பல பரிட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனை அடுத்து தொடக்க வீரராக கில் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி நிதானமாக விளையாடி 39 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே வீரர் கான்வே 10 ரன்கள் எடுத்திருந்தபோது அப்ரார் அகமது பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து வில் யங் உடன் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.
முடிவுக்கு வந்த வில்லியம்சன் சாதனை:
இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தாம் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே வில்லியம்சன் ஒரு ரன்னில் நஷிம் ஷா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இது நியூசிலாந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 40 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.
இதன் மூலம் வில்லியம்சன் படைத்த மகத்தான சாதனை ஒன்று முடிவுக்கு வந்திருக்கிறது. கேன் வில்லியம்சன் கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு தொடர்ந்து வில்லியம்சன் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்ததே கிடையாது.
வில் யங் பொறுப்பான ஆட்டம்:
2237 நாட்களாக நீடித்து வந்த சாதனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் 36 இன்னிங்ஸ்களாக வில்லியம்சன் இரட்டை இலக்கம் ரன்களின் தான் ஆட்டம் இழந்து இருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த சாதனையை வில்லியம்சன் படைத்து வந்த நிலையில் அதனை நஷிம் சா முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
ஒருபுறம் வில்லியம்சன் ஆட்டம் இழந்தாலும் மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வில் யங் ரன்களை சேர்த்து வருகிறார். நிதானமாக விளையாடி வரும் வில் யங் 56 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
இதன் மூலம் 26 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து விளையாடுகிறது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் நஷிம் சா, ஹரிஷ் ரவுப் மற்றும் அப்ரார் அகமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்கள்.