கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 57-வது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் டாஸ் போடுவதற்கு முன்பாக எம்எஸ் தோனி இந்த தொடர் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே ஒன்பது போட்டிகளில் தோல்வி அடைந்து இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நிலையில் இனி வரும் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இருந்து ஓரளவு மேலே வர முயற்சிக்கும்.
அதே சமயத்தில் அடுத்த ஆண்டு வலுவான அணியாக திரும்ப வருவோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஏற்கனவே கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் டாஸ் போடுவதற்கு முன்பாக இது குறித்து பேசிய எம்எஸ் தோனி இந்த ஆண்டு ஏற்கனவே முடிந்து விட்டது எனவும் அடுத்த ஆண்டு கேள்விகளுக்கான பதிலோடு கட்டாயம் வர வேண்டும் என சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து எம் எஸ் தோனி விரிவாக கூறும்போது “அடுத்த வருடத்திற்கான பதில்களை பெறுவது தான் தற்போது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற விரும்புகிறோம் என்று நீங்கள் கூறியிருக்கலாம். ஆனால் அடுத்த சீசனில் நாங்கள் எப்படி மீண்டும் களம் இறங்குகிறோம் என்பதுதான் அதைவிட முக்கியம். நாங்கள் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம். ஆனால் அடுத்த வருடத்திற்கு வலுவான 11 அல்லது 12 வீரர்களை களம் இறக்குவது மிகவும் முக்கியம்.
இதையும் படிங்க:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு.. ஒருநாள் கிரிக்கெட் ஆடுவாரா? – வெளியான அறிவிப்பு
இது உண்மைதான், இந்தத் தொடரில் விளையாட 3 போட்டிகள் மீதம் இருக்கிறது. ஆனால் தொடரில் இருந்து வெகு சீக்கிரமாக வெளியேறும் போது ஒரு சில வீரர்களை முயற்சித்துப் பார்த்து அவர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதை பார்க்க இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது” என எம்எஸ் தோனி பேசியிருக்கிறார். இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புதுமுக வீரராக உர்வில் பட்டேல் களம் இறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.