இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் 10 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இந்த போட்டி குறித்து ஆட்டநாயகன் அன்ஷுல் கம்போஜ் பேசியுள்ளார்.
நியூசிலாந்து மைதானத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சரியான லைன் மற்றும் லெந்த்தில் பந்துவீசியது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்தது. பிட்ச் தன்மையை விரைவாகக் கணித்து, எதிரணி பேட்ஸ்மேன்களின் பலம் மற்றும் பலவீனங்களுக்கு ஏற்ப வோபிள் சீம் வேரியேஷன்களைப் பயன்படுத்தி ரன்களைக் கட்டுப்படுத்தியதுடன் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிந்தது.
தனது இந்தச் சிறப்பான பந்துவீச்சு குறித்து அன்ஷுல் கம்போஜ் பேசும்போது “பிட்ச் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி யோசிக்காமல், சரியான லைன் மற்றும் லெந்த்தில் தொடர்ந்து பந்துவீசியதே இதன் முக்கியக் காரணம். சரியான ஏரியாக்களில் பந்துவீசுவது எனும் எங்களது அடிப்படைத் திட்டத்தையே பின்பற்றினேன்”
“இன்றைய ஆட்டத்தில் வோபிள் சீம் பந்து மிக நன்றாக வேலை செய்தது, அதனால் அதையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தினேன். இந்தத் தொடருக்கான தயாரிப்பில் எனது லெந்த் மற்றும் நல்ல லைன்களில் கவனம் செலுத்தியதுடன், பேட்ஸ்மேன்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பயிற்சி செய்தேன்”
“நியூசிலாந்து சூழ்நிலைகளுக்காக லெந்த்தை மாற்றுவது முக்கியமல்ல, ஏனெனில் எனக்கும் பிட்ச்சில் இருந்து நல்ல பவுன்ஸ் கிடைக்கிறது. எனவே நான் வீசும் லெந்த்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். வெவ்வேறு மைதானங்களில் பிட்ச்சைப் பார்த்து அங்கு என்ன நடக்கிறது, வீசுவதற்கு எந்தப் பந்து சிறந்தது, சரியான லெந்த் எது என்பதை உணர்ந்து அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்






