இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பு மைதானத்தில் மதியம் 2:30 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இலங்கை அணியின் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா இலங்கை அணி என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இதற்கு முன்பாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் நல்ல நிலையில் இருந்து போட்டியின் கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் மிக மோசமாக விளையாடி மூன்று போட்டிகளையும் இலங்கை அணி தோற்றது. இது தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவை மிகவும் வருத்தம் அடைய வைத்தது.
இந்த நிலையில் புதிதாக ஆரம்பிக்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி எப்படி வரவேண்டும்? என்பது குறித்து மீண்டும் நம்பிக்கை அளிக்கும் விதமாக அவர் பேசியிருக்கிறார். இலங்கை அணியினருக்கு அழுத்தத்தை சமாளிக்கும் கிரிக்கெட் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
இதுகுறித்து சனத் ஜெயசூர்யா பேசும் பொழுது “எங்கள் வீரர்களிடம் நான் அர்ப்பணிப்பில் எந்த குறையையும் பார்க்கவில்லை. அவர்கள் அழுத்தத்தை சிறப்பாக சமாளிக்க வேண்டும். மேலும் அவர்களுடைய கிரிக்கெட் விழிப்புணர்வை கூர்மைப்படுத்த வேண்டும். நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எங்களால் ஓடி ஒளிய முடியாது.
பவர் ஹிட்டிங் பற்றி பேசும் பொழுது இவ்வளவு தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.இலங்கை மைதானங்கள் பெரியவை. எனவே இங்கு நீங்கள் இரண்டு ரன்கள் மற்றும் பவுண்டரி எடுப்பதன் மூலமாக ஒரு பெரிய டோட்டலை எடுக்க முடியும். நிறைய சிக்ஸர்கள் அடிப்பதை இதை வைத்து ஈடு கட்டிவிட முடியும்.
ஒரு பயிற்சியாளராக, துணை ஊழியர்களாக, ஒரு அணியாக நீங்கள் வெளியில் இருந்து வரக்கூடிய விமர்சனங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நான் கிரிக்கெட் வீரராக இருந்த காலகட்டத்திலும் விமர்சனங்களை கடந்து வர வேண்டி இருந்தது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதை சந்தித்துதான் ஆக வேண்டும். விமர்சனங்கள் வரும் பொழுது அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : கூப்பிட்டு வெறுப்பேற்றிய பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்.. ஹர்பஜன் சிங் தந்த வித்தியாசமான பதிலடி
மேலும் சரித் அசலங்கா இந்த கிரிக்கெட் வடிவத்தில் எங்களுக்கு மிகவும் சிறந்த வீரர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் கேப்டன் பதவிக்கு வரும் பொழுது சில அழுத்தங்கள் இருக்கும். எனவே அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். மேலும் விளையாடும் அணியில் அவர் இல்லாமல் 10 பேர் இருக்கிறார்கள். மொத்த அணியில் 16 பேர் இருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து கேப்டனை ஆதரிக்க வேண்டும். எந்தநேரத்திலும் எங்கள் கேப்டன் கிளிக் செய்யலாம்” என்று கூறி இருக்கிறார்.






