மேலே மூடும் வசதி கொண்ட மைதானங்கள் ஏன் உருவாக்கப்படுவதில்லை? எதிர்காலத்தில் இப்படியான மைதானங்கள் சாத்தியமா? – முழு விபரம்!

0
1842
Ipl2023

ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மழை நிற்காமல் பெய்ததால் இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது!

மேலும் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்கின்ற தகவல் ரசிகர்களை மிகவும் ஏமாற்றம் அடைய வைக்கும் செய்தியாக இருக்கிறது.

- Advertisement -

இப்படி முக்கியமான போட்டிகள் மழையால் பாதிக்கப்படுவதற்கு மைதானத்திற்கு மேல் மூடாக்கு அமைக்கப்படும் வசதிகள் இருந்தால் இப்படி நடக்காது என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைச் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இப்படியான மேல் மூடாக்கு கொண்ட மைதானம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது அதிகம் பயன்படுத்தப்படுவது கிடையாது.

இப்படியான மைதானங்கள் அமைக்கப்படுவது சாத்தியமா? ஏன் மற்ற கிரிக்கெட் நாடுகள் யாரும் இப்படியான மைதானங்களை உருவாக்குவதில்லை? என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்!

- Advertisement -

கிரிக்கெட் கால்பந்தை போல தட்பவெப்ப நிலைகளுக்கு அப்பாற்பட்ட விளையாட்டு கிடையாது. கிரிக்கெட்டில் தட்பவெப்ப நிலைகளும் ஒரு முக்கிய காரணியாக உள்ளிருந்து செயலாற்றுகின்றன.

காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பொழுது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து ஸ்விங் ஆகிறது. நல்ல வெயிலால் ஆடுகளம் காய்ந்து வறட்சியாக இருக்கும் பொழுது பந்து சுழன்று திரும்புகிறது.

மூடாக்கு அமைக்கப்பட்ட மைதானத்தில் இப்படி தட்பவெப்ப நிலை ஒரு முக்கிய காரணியாக ஆட்டத்திற்குள் இருக்காது. இது கிரிக்கெட்டுக்குள் இருக்கும் முக்கியமான சவால்களை ஒழித்து விடும். எனவே போட்டித் தன்மை குறைவாக இருக்கும்.

மேலும் இப்படியான மைதானங்கள் அமைப்பது அதிகப்படியான செலவுகளைக் கொடுக்கக்கூடியது. மேலும் சிறிய அளவிலான மைதானங்களையே இந்த வகையில் உருவாக்க முடியும். ஆனால் அதிலும் கூட பெரிய மின்விளக்கு கம்பங்கள் அமைப்பதற்கு சிக்கலாக இருக்கும்.

இதையெல்லாம் தாண்டி மேல் மூடாக்கு கொண்ட மைதானங்கள் உருவாக்கப்பட்டாலும் தேவைப்படும் பொழுது அதை திறப்பதும் மூடுவதும் நேரம் எடுக்கும் பெரிய வேலை. இப்படியான காரணங்களால் இப்படியான மைதானங்கள் உருவாக்கப்படுவதில்லை.