ஐசிசி வருவாயை பங்கிடுவதில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு சிறப்பு சலுகை கொடுக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் சாதனை கேப்டன் கிளைவ் லாயிட் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
1970 மற்றும் 80களில் உலக கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக வெஸ்ட் இண்டீஸ் சிறந்தது. அப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணியை வழிநடத்திய சக்தி வாய்ந்த கேப்டனாக கிளைவ் லாயிட் இருந்தார். அப்போது அவரது தலைமையின் கீழ் 1975 மற்றும் 79 ஆம் ஆண்டுகளில் முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வென்றது.
வருவாய் பங்கீடு
தற்பொழுது உலக கிரிக்கெட்டில் ரசிகர்களை மைதானத்திற்கு கொண்டு வரும் பெரிய அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இருக்கின்றன. இதன் காரணமாக இந்த அணிகளுக்கு ஐசிசி அதிகப்படியான வருவாயை பங்கிட்டு கொடுத்து வருகிறது.
அதே சமயத்தில் மற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கு குறைவான பங்கீடு கிடைக்கிறது. மேலும் தற்போது ரசிகர்களின் ஆதரவை இழந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை தொடர்ந்து எடுத்துச் சென்று வளர்த்துவதற்கு பணம் தேவையாக இருக்கிறது. இந்த நிலையில் தான் ஐசிசிக்கு கிளைவ் லாயிட் கோரிக்கை வைத்திருக்கிறார்.
நாங்க நல்லா இருந்தப்ப கொடுத்தோம்
இதுகுறித்து கிளைவ் லாயிட் ” ஐசிசி வருவாய் பங்கீட்டில் இந்தியா இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் 180 மில்லியன் டாலர் பெறுகின்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போல வெஸ்ட் இண்டீஸ் 80 மில்லியன் மட்டுமே பெற முடியும். ஐசிசி அமைப்பில் நாங்கள் சேர்ந்து நூறு ஆண்டுகள் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருக்கிறது. எனவே நாங்கள் இப்போது எழுந்து நிற்க வேண்டும். ஐசிசி இடம் சென்று எங்களுக்கு சிறப்பு சலுகை நாங்கள் கேட்க வேண்டும். நாங்கள் நன்றாக இருந்தபொழுது எங்களுடன் விளையாட அனைவரும் விரும்பினார்கள்”
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் CPL 2025.. போட்டி அட்டவணை மற்றும் இந்தியாவில் எந்த டிவியில் பார்க்கலாம்? – முழு தகவல்கள்
“நாங்கள் அப்போது பெரிய அணிகளான ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அடிக்கடி விளையாடினோம். மேலும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு எதிராக விளையாடும் போது நாங்கள் மில்லியன் கணக்கான மக்களை மைதானத்திற்கு கொண்டு வந்தோம். நாங்கள் நீண்ட காலமாக ஐசிசிக்கு வருமானம் கிடைப்பதற்காக பாடுபட்டு இருக்கிறோம். எனவே இதனால் எங்களுக்கு ஒரு நியாயமான பங்கு கிடைக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






