இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் வருகிற 26 ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இரண்டு அணி வீரர்களும் இந்த போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரராக கருதப்படும் புஜாரா பந்து வீச்சு குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். மேலும் முகமது ஷமி காயம் காரணமாக தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறி இருக்கும் நிலையில் இந்திய அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்களை வைத்து வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை பெரிதாக கை கொடுக்காமல் இருக்க, மிடில் வரிசையில் களமிறங்கும் நித்திஷ் ரெட்டி மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவர்களிடம் பந்து வீச்சில் போதிய அளவு செயல்பாடு இல்லாத காரணத்தால் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதாக புஜாரா தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “என்னுடைய மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் இந்திய அணியின் பந்துவீச்சு கொஞ்சம் பலவீனமாக உள்ளது. ஆனால் பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி அளவில் ஓரளவு சிறப்பாக உள்ளது. முதல் ஐந்து பேர் சரியாக செயல்படாத நிலையில் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டரில் களம் இறங்கும் வீரர்கள் சிறப்பாக உள்ளனர். ஜடேஜா, நித்திஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா ஆகியோர் நன்றாக உள்ளனர். இப்போது பந்துவீச்சில் இந்திய அணி என்ன செய்யப் போகிறது.
இதையும் படிங்க:கோலி அவுட் ஆனாலும்.. இந்த ஒரு விஷயம் தொடர்ந்து செய்வார்.. போராட்ட குணம் மிக்கவர் – தினேஷ் கார்த்திக் பேட்டி
அது ஒரு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் நிதிஷ்குமார் மற்றும் ஜடேஜாவை அணியில் இருந்து நீக்க முடியாது. அப்படியானால் அணியின் கலவை எவ்வாறு இருக்கும். ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்று விட்டதால் இந்தியா இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று நினைக்கவில்லை. இந்தியா 3 வேக பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் போது நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துவீச்சாளர் எப்படி இருக்கிறார்கள். நான்காவது பவுலராக நித்திஷ் மற்றும் ஐந்தாவது ஆக ஜடேஜாவை சேர்த்தால் பந்து வீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற விரும்பினால் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். எனவே அத்தகைய பந்துவீச்சு சிறப்பாக இல்லை என்ற நிலையில் அது குறித்து நிச்சயம் சிந்திக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






