இலங்கைக்கு எதிராக கொழும்பில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில், இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் அணுகுமுறை குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சட்டேஷ்வர் புஜாரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதைத் தொடர்ந்து, இந்திய அணி அவர்களுக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தது. இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை பேட்டர்கள் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து 16 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்திய அணி போட்டியில் வலுவான நிலையில் இருந்தபோதிலும், கில்லின் கேப்டன்ஷிப் உத்திகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று புஜாரா சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டியின் சூழல் மற்றும் கில்லின் அணுகுமுறை குறித்து சட்டேஷ்வர் புஜாரா பேசும்போது “லஞ்ச் மற்றும் டீ இடைவேளைக்கு இடைப்பட்ட செஷனை எடுத்துக்கொண்டால், சுப்மன் கில்லிற்கு கேப்டனாக ஒரு பெரிய டெஸ்ட் காத்திருந்தது. ஆனால் அவர் மிக விரைவாகவே டிஃபென்சிவ் மனநிலைக்கு சென்றுவிட்டார். இங்குதான் அவர் எதிர்காலத்தில் பாடங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். இலங்கையின் கவுண்டர் அட்டாக் எதிரொலியால் இந்திய அணி சற்றே அதிர்ச்சியடைந்தது. ஆனால் இதுபோன்ற தருணங்களில் தான் கூடுதல் தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும். பவுலர்களை டிஃபென்சிவ் ஆக மாற்றாமல், தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் ஃபாலோ-ஆன் முடிவு மற்றும் அணியின் மூவ் குறித்து தொடர்ந்து பேசிய புஜாரா “தரமான அணிகளுக்கு எதிராக இந்த டிஃபென்சிவ் ஸ்ட்ராட்டஜி வேலை செய்யாது. போகப்போக அவர் இதையெல்லாம் கற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன். அதேபோல கொழும்பில் மழைக்கான வாய்ப்புகள் இருந்ததால் தான் இந்தியா ஃபாலோ-ஆன் முடிவை எடுத்தது. மைதான ஊழியர்களிடம் பேசிய பிறகே அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பார்கள். மழை அச்சுறுத்தல் இல்லாதிருந்தால் இந்தியா நிச்சயமாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவே விரும்பியிருக்கும். ஆனால் விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டதால் தற்போதைக்கு அந்த முடிவு தவறாக தெரியவில்லை” என்று கூறி முடித்துள்ளார்.






