6 பந்தில் 19 ரன்.. தோனியை காலி செய்த சந்தீப் ஷர்மா.. சிஎஸ்கே கேப்டன் போராட்டம் வீண்.. 6 ரன்னில் ராஜஸ்தான் வெற்றி

0
342

18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

ராஜஸ்தான் சென்னை மோதல்

ராஜஸ்தான் அணிக்கு சொந்தமான கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசை இழந்த ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 4 ரன் மட்டுமே எடுத்து கலீல் அகமது பந்துவீச்சில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 16 பந்துகளில் 20 ரன் எடுத்து ஆட்டம் இழக்க மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய நித்திஷ் ராணா சென்னை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

36 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 10 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸ் என 81 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளில் 37 ரன்கள் குவிக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. சென்னை அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் கலீல் அகமது, நூர் அகமது, பத்திரனா தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

6 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரவீந்திர டக் அவுட் ஆகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் ராகுல் திருப்பாதி பந்துகளை வீணடித்து 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் மிடில் வரிசை ஆட்டக்காரர் சிவம் தூபே 18 ரன்கள் எடுத்து வெளியேற, கேப்டன் ருத்ராஜ் மட்டுமே போராட்ட குணத்தை வெளிப்படுத்தி விளையாடி வந்தார். அவருக்கு பின்னர் வந்த விஜய் சங்கர் ஒன்பது ரன்னில் வெளியேற, கேப்டன் ருத்ராஜ் இறுதியாக 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க:699 நாட்களுக்குப் பின் முதல் விக்கெட்.. முடிவுக்கு வந்த ஆர்ச்சரின் ஏக்கம்.. முதல் பவுலராக சாதனை.. ஐபிஎல் 2025

அதற்குப் பின்னர் கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றி பெற 38 ரன்கள் தேவைப்பட, தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் அந்த ஓவரில் 19 ரன்கள் சேகரித்தனர். அதற்கு பின்னர் கடைசி ஓவரில் சந்தீப் சர்மாவின் முதல் பந்தில் தோனி ஆட்டம் இழந்து வெளியேற, அந்த ஓவரில் சென்னை அணியால் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இறுதியில் 6 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே ராஜஸ்தான் அணி இடம் தோல்வி அடைந்தது. ஏற்கனவே சென்னை அணி பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில் தற்போது இரண்டாவது தோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றியாக அமைந்துள்ளது.

- Advertisement -