கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்து என்றால் அதில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தியது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து திடீரென்று ஒரு சூறாவளி போல 1970களில் கிளைவ் லாயிட் தலைமையில் எழுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கிரிக்கெட்டை தாக்கி ஆதிக்கம் செலுத்தியது!
1980 களில் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இவருக்கு அடுத்து பிரைன் லாரா, காரல் ஹூப்பர் என வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் தொடர்ந்தது!
இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் சிவ்நரைன் சந்தர்பால் மிகவும் முக்கியமானவர் மற்றும் வித்தியாசமானவர். இவரது பேட்டிங் ஸ்டேன்ஸ் இன்று வரை எவராலும் வெற்றிகரமாக நகலெடுக்க முடியாதது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிகபட்ச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரராக இருக்கிறார்.
இந்த வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வீரரின் மகனான டேக்நரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமாகி, அறிமுக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அரை சதங்கள் கண்டு சிறப்பான துவக்கத்தை பெற்றார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த நாட்டுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 447 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் பிரத்வெயிட் 182 ரன்களும், மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சந்தர்பால் மகன் டேகநரைன் சந்தர்பால் 467 பந்துகளைச் சந்தித்து 13 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 207 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அறிமுகமாகி விளையாடிய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து தனது தந்தையின் மறுவடிவாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் எழுந்திருக்கிறார் இவர்!






