சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணி பல பரிட்சை நடத்துகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் ஐசிசி தொடர் நடைபெறுவதால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த தொடரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு ஏற்கனவே ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டிருந்தது. பாகிஸ்தான அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் தொடக்க வீரர் சயிம் அயூப் இருந்தார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் விளையாடவில்லை.
இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் தொடக்க வீரராக களம் இறங்குகிறார். இதேபோன்று அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படாத பகார் ஜமான், தொடக்க வீர்ராக களம் இறங்குகிறார்.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். மாலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்ததாக தெரிவித்தார். இந்த சூழலில் ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் நியூசிலாந்து வீரர் அடித்த பால் பௌண்டரிக்கு சென்றது.
அதனை தடுக்க பகார் சமான் ஓடினார். ஆனால் பகார் சமானுக்கு அப்போது காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து வலியால் துடித்த பகார் சமான் தாம் களத்தை விட்டு விலகுவதாக கேப்டனிடம் சைகையை காட்டி வெளியேறினார். பகார் சமான் தற்போது காயம் காரணமாக வெளியேறி இருப்பது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது இருக்கும் ஐசிசி புதிய விதிப்படி பை ரன்னர் வைத்துக் கொள்ள முடியாது. இதனால் பகார் சமான் பேட்டிங் செய்ய வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை பகார் சமான் வரவில்லை என்றால் முஹமது ரிஸ்வான் தான் தொடக்க வீரராக களமிறங்குவார்.