சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணி வர மறுத்ததால் துபாயில் இந்தியா விளையாடும் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்று நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்கிறது.
இந்தத் தொடர் அந்த மூன்று அணிகளுக்கும் நல்ல ஒரு பயிற்சி களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வைத்து பாகிஸ்தானில் பயிற்சி ஆட்டத்தை நடத்த ஐசிசி முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்திய அணி துபாயில் போட்டிகளை எதிர்கொள்வதால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு துபாய் மைதானம் பற்றி தெரிய வேண்டும் என்பதற்காக அங்கு ஒரு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாட்டு இருக்கிறது. ஆனால் இந்திய அணி யாரை எதிர்கொள்ளப் போகிறது. இதற்கான தேதி என்ன என்பது குறித்து ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது.
வங்கதேசம் அல்லது யுஏஇ அணியை இந்தியா பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. முதல் வாய்ப்பாக வங்கதேசம் அணி தான் இருக்கும். இந்தியா தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை தான் எதிர்கொள்கிறது. இதனால் இரு அணிகளுக்கும் துபாயில் விளையாடுவதற்கு இது பயிற்சியாக அமையும் என தெரிகிறது.
ஒருவேளை வங்கதேசம் இதற்கு உடன்பாடில்லை என்றால் யுஏஇ அணியை வைத்து போட்டியை நடத்த பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறது. இந்திய அணி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி முடிவடையும் நிலையில் அதன் பிறகு அங்கிருந்து நேரடியாக இந்திய அணி வீரர்கள் துபாய்க்கு புறப்படுகின்றனர்.
இடையில் ஏழு நாட்கள் இருப்பதால் அதில் ஏதேனும் ஒரு நாளில் பயிற்சி போட்டியை நடத்த ஐசிசி ஏற்பாடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும் நிலையில் துபாய் ஆடுகளும் கொஞ்சம் தோய்வாக இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் தடுமாறலாம்.