நாளை இந்தியா டி20 உலகக்கோப்பை இரண்டாவது சுற்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த கேப்டன் சூரியகுமார் யாதவ் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரையில் அபிஷேக் ஷர்மா ஒரு ரன் கூட எடுக்கவில்லை. இருந்த போதிலும் கூட அவரை தாங்கள் நம்புவதாகவும், அவர் குறித்து கவலைப்படுபவர்களை நினைத்துதான் தான் கவலைப்படுவதாகவும் கேப்டன் சூர்யா குமார் யாதவ் கூறியிருக்கிறார்.
என் கவலை இதுதான்
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “அபிஷேக் ஷர்மா பேட்டிங் குறித்து கவலைப்படுபவர்களை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன். அவரை எதிர்கொள்ள போகும் அணிகள் பற்றி நான் நினைக்கிறேன். மீதியை பற்றி பதில் உங்களுக்கே தெரியும். அவர் திரும்பி வந்துவிட்டால் என்ன செய்வார் என எல்லோருக்குமே தெரியும்”
“இது ஒரு அணி விளையாட்டு. சில நேரங்களில் தனிப்பட்ட வீரர்களுக்கு இப்படி நடக்கும். அவர் தன்னுடைய இயல்பான முறையில் விளையாட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அவரும் அதையே செய்கிறார். அது வேலை செய்யவில்லை என்றால் பிரச்சனை இல்லை. அந்த வேலையை செய்ய நாங்கள் அனைவரும் இருக்கிறோம். கடந்த ஆண்டு அவர் எங்களை காப்பாற்றினார்; தற்போது எங்களுடைய முறை”
ஆடுகளங்கள் மாறிவிட்டது
“தற்போது பவர் பிளேவில் 40, 50 ரன்கள் என்பது மிகவும் சாதாரண ஒரு கிரிக்கெட்டாக மாறிவிட்டது. நாங்கள் ஏற்கனவே மோதிய இருதரப்பு தொடர்களில் பெரிய ரன்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே பெரிய ஸ்கோர் எடுக்கப்படும் என்கின்ற எதிர்பார்ப்பு இயல்பானது”
இதையும் படிங்க : எதிரணி டிரெஸ்ஸிங் ரூம் அலற வச்சவர் அபிஷேக்.. ஆனா வாஷிங்டன் சுந்தர் வேண்டாம்.. இவர் போதும் – ஹர்பஜன் சிங் கருத்து
“நமக்கு 220 ரன்கள் எடுக்கலாம் என்கின்ற எண்ணம் இருக்கும். ஆனால் நாம் ஏற்கனவே விளையாடிய ஆடுகளங்களில் இருந்து தற்போதைய ஆடுகளங்கள் மாறுபட்டு இருக்கின்றன. எங்களுக்கு எதிராக ஆரம்பத்திலேயே ஆப் ஸ்பின்னர்களை கொண்டு வருகிறார்கள். நாங்கள் தற்போது இதற்காக தயாராகி வருகிறோம்” என்று கூறி இருக்கிறார்.






