நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்து அசத்தியிருக்கிறது. இந்த வெற்றி குறித்து நேற்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சூரியகுமார் 39 பந்துகளில் 57 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி பந்துவீச்சில் சிறப்பான முறையில் செயல்பட்டு 200 ரன்கள் எடுக்க வேண்டிய மும்பை அணியை கட்டுப்படுத்தியது.
ஜோஸ் இங்லீஷ் பிரியன்ஸ் ஆர்யா அபாரம்
இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு பிரியன்ஸ் ஆர்யா 35 பந்துகளில் 62 ரன்கள், ஜோஸ் இங்லீஷ் 42 பந்தில் 73 ரன்கள் எடுக்க அந்த அணியின் வெற்றி எளிதாக மாறியது. இறுதியாக 18.3 ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.
இந்த வெற்றி குறித்து பேசி உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “தனிப்பட்ட முறையில் அணியில் உள்ள ஒவ்வொருவரும் முன்னேறி சென்ற இருப்பதாக நான் உணர்கிறேன். எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்கின்ற மனநிலையில் நாங்கள் இருக்கிறோம். இதற்காக அனைவருக்கும் மற்றும் அணி நிர்வாகத்திற்கும் பாராட்டுகள். ரிக்கி உண்மையில் அற்புதமானவர். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கையை பெறுவது பற்றியது. இது போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் நடந்தது. இதைத் தொடர்ந்து நாம் பராமரிக்க வேண்டும்”
முதுகில் குத்துவது எளிது
“நீங்கள் வீழ்ச்சியில் இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் முதுகில் குத்துவது மிகவும் சுலபமானது. பிரியன்ஸ் விளையாடுவதை பார்க்க கண்ணுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவர் அற்புதமாக தொடங்கி இருக்கிறார். அணியில் உள்ள ஒவ்வொரு நபரும் அச்சமின்றி இருக்கிறார்கள். எல்லோரும் வலைப் பயிற்சியில் உழைப்பது களத்தில் வருகிறது”
இதையும் படிங்க : 59 பந்து 109 ரன்.. மும்பையை துரத்திய பஞ்சாப் ஜோடி.. ஆர்சிபியா குஜராத்தா?.. புள்ளி பட்டியல் ரேஸ்
“ஜோஸ் இங்லீஷ் பெரிய போட்டிகளுக்கான பெரிய வீரர். அவர் அதிக பந்துகள் விளையாட வேண்டும் என்று நான் விரும்பினேன். இதன் காரணமாகவே அவரை நான் என்னுடைய இடத்திற்கு மேலே அனுப்பினேன். அவர் எதிரணியிடமிருந்து போட்டியை தனியாக பறிக்க முடிந்தவர் என்பது எனக்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளாக எங்களுக்குள் ஒரு நட்புறவு இருக்கிறது. ரிக்கி பாண்டிங் களத்தில் என்னை தீர்க்கமாக முடிவெடுக்க விடுகிறார். இவை அனைத்தும் சேர்ந்து தற்பொழுது உச்சத்தை எட்டி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






