இன்று விக்கெட் கீப்பிங்கில் காயமடைந்த ரிஷப் பண்ட் நாளை மீண்டும் போட்டிக்கு திரும்பி வருவாரா என்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்திருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோசமான சாலை விபத்தில் இருந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் திரும்பி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடக்க முடியாத ரிஷப் பண்ட்
இன்று முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய பொழுது ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பணியில் இருந்தார். அப்போது ரவீந்திர ஜடேஜா பந்து ஒன்று இடது கை பேட்ஸ்மேனை ஏமாற்றியதோடு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டையும் ஏமாற்றியது.
பந்து எங்கே செல்கிறது? என்று தெரியாமல் நின்ற ரிஷப் பண்ட் முழங்காலில் சரியாக பந்து தாக்கியது. அந்த காலில் குறிப்பிட்ட பகுதியில் ஏற்கனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மைதானத்தில் அப்படியே விழுந்த அவர் மேற்கொண்டு நடக்க முடியாமல் பிசியோக்கள் உதவியுடன் களத்தை விட்டு வெளியேறினார்.
ரிஷப் பண்ட் தொடர்ந்து விளையாட வருவாரா?
இந்த நிலையில் ரிஷப் பண்ட் நாளை விக்கெட் கீப்பிங் செய்வதற்கு திரும்பி வருவாரா? என்பது ஒரு புறம் இருக்க, ஆஸ்திரேலியா தொடருக்கு மிக முக்கிய வீரராக அவர் பார்க்கப்படுவதால், அவருக்கு முழங்காலில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது? என்பது குறித்து ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : டாஸ்ல தப்பு செஞ்சிட்டேன்.. ஆனா விராட் விஷயத்துல நான் இன்னைக்கு முடிவு எடுக்கல – ரோகித் சர்மா ஓபன் பேட்டி
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா “ரிஷப் பண்ட்க்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது மேலும் அந்த இடத்தில் தற்போது வீக்கம் இருக்கிறது. அதே முழங்காலில் தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அவர் விஷயத்தில் நாங்கள் எதுவும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. நாளைய போட்டிக்கு அவர் மீண்டும் திரும்பி வருவார் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.






