ஒரு வாரம் இந்த வீரரை என்னிடம் அனுப்பி வையுங்கள், நான் அவரை மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச வைக்கிறேன் – பிரெட் லீ

0
75

கடந்த ஆண்டு முதலே ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் தன்னுடைய வேகத்தால் அனைவரையும் கவர்ந்து விட்டார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிவேகத்தில் ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ச்சியாக பந்து வீசி வருகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று போட்டியில் மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக பந்து அது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 14 போட்டிகளில் விளையாடி இதுவரை இருபத்தி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருடைய பந்துவீச்சு எக்கானமி 9.03 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 13.57 ஆக உள்ளது.

- Advertisement -

அனைத்து பார்மேட்டிலும் அவர் விளையாட வேண்டும்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் விளையாடி வரும் உம்ரான் மாலிக் மற்றும் ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் மோஷின் கான் இருவரும் தொடர்ச்சியாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி வருகின்றனர். இவர்கள் இருவரையும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

கடந்த பத்து இருபது ஆண்டுகளில் 130 அல்லது 140 கிலோ மீட்டர் வேகத்தில் தான் சராசரியாக பந்துவீச்சாளர்கள் பந்து வீசி வருகின்றனர். ஒரு சில சமயம் அவர்கள் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் தொடர்ச்சியாக தவறுகின்றனர். அப்படி இருக்கையில் இந்த இரண்டு இளம் இந்திய வீரர்கள் இவ்வாறு பந்து வீசுவது தனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் இவர்கள் இருவரும் குறிப்பாக உம்ரான் மாலிக்கை அனைத்து வகை கிரிக்கெட் பார்மேட்டிலும் விளையாட வைக்க வேண்டும். அவரை சரியான வகையில் தயார்படுத்தி இந்திய அணிக்கு வருங்கால வேகப்பந்து வீச்சாளராக கொண்டுவரவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

ஒரு வாரம் என்னிடம் அவரை விட்டுப் பாருங்கள்

மேலும் பேசிய அவர் அதிவேகத்தில் பந்து வீசும் நிலையில் அதேசமயம் உடலில் ஒரு சில காயங்கள் ஏற்படலாம். அதற்கு ஏற்றவாறு நம் உடலை நாம் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும். ஜிம்மில் அதிக எடை தூக்க கூடாது அதே போல சரியான இடைவெளிவிட்டு உடற் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்கு தகுந்த உணவுகளையும் ஓய்வையும் அளிக்க வேண்டும்.

உம்ரான் மாலிக் தற்பொழுது மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி வருகிறார். என்னிடம் ஒரு வாரம் அவரை விட்டுப் பாருங்கள் நான் அவரை மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச வைக்கிறேன் என்று புன்னகையுடன் பிரெட் லீ கூறி முடித்தார்.