ரொம்ப தப்பு.. ஆர்சிபி 17 கோடிக்கு கேமரூன் கிரீனை இந்த காரணத்தினால் வாங்கிருக்க கூடாது.. பிராட் ஹாக் அதிரடி பேட்டி

0
536

ஆர்சிபி அணி தேர்ந்தெடுத்துள்ள கேமரூன் கிரீன் ஒரு மோசமான தேர்வாக இருக்கும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட்ஹாக் கூறுகிறார்.

2024ஆம் ஆண்டுக்கான ஐபில் போட்டி அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஐபில் அணிகள் தங்களுக்கான வீரர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். டிசம்பர் 13ஆம் தேதி வீரர்களுக்கான மினிஏலம் நடைபெற உள்ளது.

- Advertisement -

தற்போது வீரர்களை டிரேடிங் முறையில் ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்கு வர்த்தகம் செய்யும் முறையும் நடைபெறுகிறது. மேலும் உலகக்கோப்பையில் ஜொலித்துள்ள வெளிநாட்டு வீரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் ட்ராவிஸ்ஹெட் ஆகியோர் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என்று கருதப்படுகிறது.

மேலும் சில வருடங்கள் ஐபிஎல் ஆடாத மிட்சல் ஸ்டார்க்கின் வருகை ஏலத்தை இன்னும் சுவாரசியப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் ஸ்பின்னர்களை நல்ல தொகைக்கு வாங்குவார்கள் என்று நம்பலாம்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்சிபி அணியின் ஏலம் குறித்த கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

- Advertisement -

” மும்பை அணியில் இருந்த கேமரூன் கிரீனை ஆர்சிபி அணி வாங்கியது ஒரு மோசமான தேர்வாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்காக கிரீனை விடுவித்தனர். மேலும் ஆல்ரவுண்டருக்கு பெரிய தொகை செலவழிக்க விரும்பாத ஆர்சிபி, கேமரூன் கிரீனை மும்பை அணையில் இருந்து டிரேடிங் முறையில் வாங்கிக் கொண்டது.

கேமரூன் கிரீன் நல்ல திறமையான ஆல் ரவுண்டர். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நல்ல தரத்தில் இருந்தார். ஆனால் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை கிரீனின் வருகைக்கு முன்பே பெரிய தரத்தில் இருந்தது. எனவே அவர்கள் தரமான பந்து வீச்சாளருக்குத் தான் சென்றிருக்க வேண்டும்.

நீங்கள் ஐபிஎல்லில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்றால் முதலில் உங்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் தேவை. பந்து வீச்சாளர்கள் தான் ஆட்டத்தின் போக்கை எந்த சூழ்நிலையிலும் மாற்றக் கூடியவர்கள். கேமரூன் கிரீன் வேறொரு அணிக்குப் பொருத்தமாக இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஆர்சிபி அணி தேர்வு செய்தது நல்ல விஷயம் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய கேமரூன் கிரீன், 452 ரன்களை குவித்ததோடு 16 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல தேர்வாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.