பார்டர் கவாஸ்கர் டிராபியில் அதிக ஆட்டநாயகன் விருது வாங்கிய நான்கு வீரர்கள்!

0
583
BGT

ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆலன் பார்டர், இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இவர்கள் இருவரது திறமையைப் போற்றும் விதமாக இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு 1996 -97 ஆண்டு முதல் பார்டர் கவாஸ்கர் டிராபி என்று பெயர் சூட்டி நடத்தப்பட்டு வருகிறது!

தற்பொழுது நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் 16 வது தொடராகும். முழுமையாக நடந்து முடிந்துள்ள 15 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி அதிகபட்சமாக ஒன்பது முறை தொடரை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா அணி ஐந்து முறை வென்றுள்ளது. ஒருமுறை தொடர் டிராவில் முடிந்துள்ளது.

- Advertisement -

மேலும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை அதிகபட்சமாக இந்திய அணி கடந்த நான்கு தொடர்களாக தன்வசம் வைத்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இதை இரண்டு முறைக்கு மேல் செய்தது கிடையாது. நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இரண்டு போட்டிகளை வென்று தன் வசப்படுத்தி உள்ளது. மேலும் இந்தத் தொடரை இந்திய அணி வெல்லும் பொழுது தொடர்ந்து நான்கு முறை தொடரை வென்று பார்டர் கவாஸ்கர் டிராபியை வசப்படுத்திய அணியாக இந்திய அணி திகழும்!

இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய நான்கு வீரர்கள் யார் என்று இந்தச் சிறிய கட்டுரைத் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்!

ஸ்டீவன் ஸ்மித் ஆஸ்திரேலியா :

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மட்டும் அல்லாது தற்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவம் பெற்ற பேட்ஸ்மேனாக விளங்கும் இவர் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இதுவரை மொத்தம் மூன்று ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்!

செதேஸ்வர் புஜாரா இந்தியா :

இந்திய அணியின் அடுத்த தடுப்புச் சுவர் என்று புகழப்படும் பரோடா வீரரான இவர் தற்சமயம் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் தனது நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடியவர் என்ற சிறப்பை பெற்றார். இந்தத் தொடரில் புஜாரா மொத்தம் நான்கு ஆட்டநாயகன் விருதுகளை பெற்றுள்ளார்!

ரவீந்திர ஜடேஜா இந்தியா :

உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை தந்து, இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெல்ல முக்கிய பங்கு எடுத்து தொடர்ந்து இரண்டு ஆட்டநாயகன் விருதுகளை பெற்றார். மொத்தமாக இவர் பார்டர் கவாஸ்கர் தொடரில் நான்கு ஆட்டநாயகன் விருதுகள் பெற்றுள்ளார்!

சச்சின் டெண்டுல்கர் இந்தியா :

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரின் பெயர் ஏதாவது சாதனைகளில் விடுபட்டால்தான் ஆச்சரியமாக இருக்கும். பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர் இவர்தான். மூன்று முறை தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். இதேபோல் அதிக ஆட்டநாயகன் விருதை வென்றவரும் இவர்தான். மொத்தமாக ஐந்து ஆட்ட நாயகன் விருதை பார்டர் கவாஸ்கர் டிராபியில் வென்றிருக்கிறார்!