ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் சதம் விளாசி, ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை வென்ற பிறகு அபிஷேக் சர்மா பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும்போது “30 பந்துகளில் 100 ரன்கள் எப்படி சாத்தியமானது என்று கேட்கிறீர்கள். நான் ஏற்கனவே கூறியது போல, கடந்த இரண்டு வருடங்களாகவே நாங்கள் இந்த அதிரடி ஆட்ட முறையைத்தான் பின்பற்றி வருகிறோம். ஒன்று அல்லது இரண்டு தொடர்களில் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்பதால் மட்டுமே எங்கள் பேட்டிங் வரிசையின் திறமையை மதிப்பிட்டுவிட முடியாது. உலகக்கோப்பைக்கு முன்பாக எல்லா போட்டிகளிலும் எதிரணி யாராக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்”
“ஒரு கிரிக்கெட் வீரராக வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இயல்புதான். ஆனால், டிரஸ்ஸிங் ரூமில் உள்ள சூழலும், நாங்கள் அனைவரும் யோசிக்கும் விதமும்தான் மிகவும் முக்கியம். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக நின்று, அடுத்த போட்டியை நோக்கி கவனம் செலுத்தி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும்.”
“மைதானத்தில் பந்துவீச்சாளர்களை விளாசித் தள்ளும்போது என் மனதில் என்ன ஓடும் என்றால், அது எல்லாமே ஒவ்வொரு தொடருக்கு முன்பும் நான் செய்யும் முறையான திட்டமிடல்தான். எனக்கு எதிராக யார் பந்துவீசப் போகிறார்கள், பவர்-ப்ளே ஓவர்களை நான் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பேன்.”
நான் மைதானத்தின் குறிப்பிட்ட திசைகளில் மட்டும் பந்தை அடிக்க விரும்புவதில்லை. பந்தை பார்த்து அதற்கு ஏற்றவாறு அடிப்பது மட்டுமே எனது எளிமையான திட்டம். முதல் நாளில் இருந்தே மைதானத்திற்குச் சென்று என் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறேன். வரவிருக்கும் அனைத்து போட்டிகளிலும் இதைத்தான் செய்யப் போகிறேன். எப்போதும் சிறப்பான ஆட்டத்தைக் கொடுக்க முடியாது என்றாலும், பவர்-ப்ளேயைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரத்தை எங்கள் அணியில் உருவாக்கியிருக்கிறோம்.
“இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் முழு ஆதரவு மிகவும் அவசியம். அணி நிர்வாகமும் கேப்டனும் கொடுக்கும் அந்த நம்பிக்கையும் சுதந்திரமும்தான் எங்களை பல வருடங்களாக இப்படி விளையாட வைக்கிறது. அவர்கள் தரும் அந்த உந்துதலே எங்களை ஒரே அணியாக இயங்கச் செய்து, போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வைக்கிறது. மிக்க நன்றி” என்று கூறியிருக்கிறார்






