2022 ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை வெளியானது ; முதல் போட்டியில் சென்னை – கொல்கத்தா மோதல்

0
1133
Tata IPL 2022 Schedule

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை சற்று முன்னர் வெளியாகியுள்ளது. முன்னரே தெரிவித்தபடி இம்மாதம் 26ம் தேதி சனிக்கிழமை அன்று முதல் போட்டி நடைபெற இருக்கிறது. இரவு 7:30 மணி அளவில் தொடங்கும் இப்போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றனர். இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதல் போட்டி நடந்து முடிந்த பின்னர் அதற்கு அடுத்த நாளான 27ஆம் தேதி 3:30 மணி அளவில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே நாள் இரவு ஏழு முப்பது மணி அளவில் டிஒய் பட்டில் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் வருகிற மார்ச் 28ஆம் தேதி அன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் மோத இருக்கின்றனர். மீதமிருக்கும் இரு அணிகளான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மார்ச் 21ஆம் தேதியன்று புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் பலப்பரிட்சை மேற்கொள்ள இருக்கின்றனர்.

12 பகல் ஆட்டங்கள் மற்றும் 58 இரவு ஆட்டங்கள்

இப்படியாக லீக் சுற்றில் மார்ச் 26ம் தேதி துவங்கி மே மாதம் 22ஆம் தேதி வரை மொத்தமாக 70 போட்டிகள் இந்த 10 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கின்றன. 70 ஆட்டங்களில் 58 போட்டிகள் இரவு 7:30 மணி அளவில் நடைபெற இருக்கின்றது. மீதமிருக்கும் 12 ஆட்டங்கள் பகல் போட்டிகளாக 3:30 மணி அளவில் நடைபெற உள்ளது. லீக் சுற்றில் உள்ள அனைத்துப் போட்டிகளும் மும்பையில் உள்ள வான்கடே,பிரபோர்ன், டிஒய் பட்டில் மற்றும் புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அதிக முறை விளையாடிய அணியாக மும்பை அணி முதலிடத்தில் உள்ளது. இதுவரை எட்டு முறை மும்பை அணி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடி இருக்கிறது.

இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 7-வது முறையாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் களமிறங்க உள்ளன. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இந்த இரு அணிகளில் எந்த அணி வெற்றியை ருசி பார்க்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரில் நடைபெறும் நிலையில், ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.