இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் அதிரடியாக வெளியேற்றம் – மாற்று ஸ்பின்னரை அணியில் சேர்த்தது பிசிசிஐ

0
248
Kuldeep Yadav

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 12ம் தேதி முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.

ரோஹித் ஷர்மாவின் 400வது சர்வதேச போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற அனைத்து வித பயிற்சியும் தற்பொழுது எடுத்து வருகிறது.

- Advertisement -

மீண்டும் களமிறங்கும் அக்ஷர் பட்டேல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அக்ஷர் பட்டேல் காயம் காரணமாக சில நாட்கள் அதற்குரிய சிகிச்சை எடுத்து வந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மீண்டும் அவர் அதற்குரிய சிகிச்சை எடுத்து வந்தார்.

தற்பொழுது நல்ல உடல்நிலையில் விளையாட தயாராக இருக்கும் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் குல்தீப் யாதவை நீக்கி அவரது இடத்தில் தற்போது அக்ஷர் பட்டேலை பிசிசிஐ இணைத்துள்ளது.

- Advertisement -

கடந்த சில வருடங்களாகவே குல்தீப் யாதவ் அவ்வளவாக வாய்ப்பின்றி ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை முடித்து தற்போது விளையாடும் நிலையில் அவர் இருந்தாலும் முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜெயந்த் யாதவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மற்றொரு சாதனை படைப்பாரா அக்ஷர் பட்டேல்

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் அக்ஷர் பட்டேல் மிக அற்புதமாக விளையாடினார். குறிப்பாக ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து 70 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணியை இரண்டு நாட்களில் சுருட்டினார்

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் ஹால் (5 விக்கெட் கைப்பற்றுவது) எடுத்தும் அசத்தினார். இதன் மூலமாக முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் அதிக 5 விக்கெட் ஹால் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அக்ஷர் பட்டேல் ( 4 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து 5 விக்கெட் ஹால்) தன்வசப்படுத்தினார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரோட்ணி ஹாக் 1978 ஆம் ஆண்டு அறிமுகமான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலேயே ஐந்து 5 விக்கெட் ஹால் கைப்பற்றி அதிவேக ஐந்து விக்கெட் ஹால் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அவருக்கு அடுத்தபடியாக அக்ஷர் பட்டேல் அவரை விட கூடுதலாக ஒரு போட்டி எடுத்துக் கொண்டு, மொத்தமாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கெட் ஹால் கைப்பற்றி இரண்டாவது அதிவேக ஐந்து விக்கெட் ஹால் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

எனவே இலங்கைக்கு எதிராக நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அக்ஷர் பட்டேல் மீண்டும் ஏதாவது ஒரு சாதனை படைப்பாரா என்கிற எதிர்பார்ப்பில் அனைத்து இந்திய ரசிகர்களும் உள்ளனர்