எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவிடம் ஆக்ரோஷமாக தேவை இல்லாமல் நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரருக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
தற்போது ஓமன் நாட்டில் வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசியக் கோப்பைத் தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
வம்பிழுத்த பாகிஸ்தான் இளம் வீரர்
இந்த போட்டியில் பாகிஸ்தான் இளம் சுழல் பந்துவீச்சாளர் சுபியான் முகீம் பந்துவீச்சை அடித்து விளையாட அபிஷேக் ஷர்மா சென்று ஆட்டம் இழந்தார். ஆனால் அதற்கு முன்பாக பவர் பிளேவில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விக்கெட் இழப்பில்லாமல் எடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து அபிஷேக் சர்மா விக்கெட்டை கைப்பற்றிய சுபியான் முகீம் அவரை களத்தை விட்டு வெளியேறுமாறு வாயில் விரல் வைத்து கோபமாக சைகை செய்தார். மேலும் அவர்களுடைய மொழியில் சில வார்த்தைகளை விட்டார். இதனால் கோபமடைந்த அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு கள நடுவர்கள் வந்து இருவரையும் பிரித்து விட்டார்கள்.
பையை எடுத்துக்கொண்டு கிளம்பு
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “கிரிக்கெட் தரம் வாய்ந்த ஒரு விளையாட்டு. இதில் சுபியான் முகீம் மற்றும் அபிஷேக் சர்மா விவகாரம் என்னை மிகவும் வருத்தப்பட வைத்திருக்கிறது. நான் மட்டும் அந்த பாகிஸ்தான் அணியின் அணி மேனேஜராக இருந்திருந்தால், நான் சுபியானிடம் ‘மகனே உன்னுடைய பையன் எடுத்துக்கொண்டு நீ நாட்டிற்கு கிளம்பு’ என்று கூறி இருப்பேன். நீங்கள் இன்னும் பாகிஸ்தானுக்கு சரியான கிரிக்கெட் விளையாட வில்லை அதற்குள் இது என்ன மாதிரியான நடத்தை?”
இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட்.. தேவை இல்லாம ஹைப் ஏத்தறாங்க.. சின்ன பசங்க போய் ஜெயிக்கலையா? – முகமத் ஷமி விமர்சனம்
“நீங்கள் ஏதாவது சிறப்பாக பதிவு செய்தீர்களா அல்லது ஹாட்ரிக் விக்கெட் எடுத்தீர்களா? நீங்கள் அந்த மாதிரி எந்த நிலைக்கும் இன்னும் நீங்கள் வரவில்லை. எதிர் அணிகளுக்கு எப்படி மதிப்பு கொடுப்பது என்று பாகிஸ்தான் ஏ அணி நிர்வாகம் அந்த வீரர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






