இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மிகவும் பரிதாபமான தோல்வியை சந்திக்க இருக்கும் பாகிஸ்தான் அணி குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக கடந்த மாதத்தில் பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளையும் தோற்று தொடரையும் இழந்தது. அதில் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தும் தோற்றது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ் 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தும் தோற்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடுகளத்தில் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம்
பாகிஸ்தான் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கிறது என்கின்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அங்கு வழக்கமாக 500, 600 ரன்கள் என்பது மிகவும் சாதாரண ஒன்றாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருப்பதை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜேஷன் கில்லஸ்பி பயிற்சியாளராக வந்ததும், ஆடுகளங்கள் தரமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 556 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து அணியும் 823 ரன்கள் குவித்தது. அந்த அளவிற்கு பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் எதிராக இருந்தது. தற்போது இதுவும் பெரிய விமர்சனம் ஆகி வருகிறது.
பாபர் அசாம் வெளியேற வேண்டும்
முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 30 மற்றும் 5 ரன்கள் எடுத்த பாபர் அசாம் பற்றி பேசிய பசித் அலி “பாபருக்கு தற்பொழுது ஓய்வு தேவை. அவர் தனக்கு ஓய்வு தேவை என்று கூற வேண்டும். அவர் ஒரு அரைசதம் அடித்து 18 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் ஆகிறது. அவருடைய இடத்தில் பவாத் ஆலம் போன்ற வேறு யாராவது இருந்திருந்தால் மூன்று போட்டிகளில் வெளியே அனுப்பி இருப்பார்கள். பாபர் தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்”
இதையும் படிங்க : கடைசி நொடியில் சூரியகுமார் எடுத்த முடிவு.. கம்பீர் வந்ததும் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றம்.. முழு தகவல்கள்
“ஷான் மசூத் ஒரு தொடக்க ஆட்டக்காரர் அவர் தொடக்க இடத்தில் விளையாட வேண்டும். ஆனால் அவரோ மூன்றாவது இடத்தில் தற்போது விளையாடுகிறார். மேலும் அவர் தொடக்க இடத்திற்கு சென்றால் யாரை நீக்குவார்கள்? அடுத்து அவருக்கு கேப்டன் பொறுப்பும் செய்ய தெரியாது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நடந்த மிகவும் வெட்கக்கேடானது” என்று கடுமையாக கூறியிருக்கிறார்.






