சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் வெளியேறி இருப்பது ஒட்டுமொத்த அந்த நாட்டு ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடரை நடத்திய நிலையில் பாகிஸ்தான் அணி இவ்வாறு தோல்வியை தழுவி இருந்தது.
இந்த சூழலில் பல முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் t20 தொடரில் இருந்து முகமது ரிஸ்வான்,பாபர் அசாம் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் வீரர்கள் பாபர் அசாமை கடுமையாக விமர்சித்து வருவதற்கு தற்போது அவருடைய தந்தை பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாபர் அசாம் தந்தை அசாம் சித்திக், “பாஸ் எப்போதுமே சரியாகத்தான் இருப்பார்.”
மீண்டும் அணிக்கு திரும்புவார்:
“2024 ஆம் ஆண்டு ஐசிசி t20 அணியில் இடம் பெற்று இருக்கும் ஒரு வீரரை நீங்கள் உங்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறீர்கள். இருந்தாலும் பரவாயில்லை. பாபர் அசாம், நேஷனல் டி20 மற்றும் psl தொடரில் சிறப்பாக செயல்படுவார். இறைவன் நாடினால் அவர் மீண்டும் அணிக்கு திரும்பி ரன்கள் குவிப்பார்.”
“அதுதான் மரியாதைக்குரிய செயலாக இருக்கும். ஆனால் சில முன்னாள் வீரர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்கள். அவர்களெல்லாம் தங்களுடைய வார்த்தைகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். ஏனென்றால் யாரேனும் உங்களுக்கு பதில் அளித்து விட்டால் அப்போது உங்களால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது.”
நீங்க எப்படி விளையாடினீங்க?
“நீங்கள் எல்லாம் கடந்த காலத்தை சேர்ந்தவர்கள். உங்களால் மீண்டும் அணிக்கு திரும்பி விளையாட முடியாது. மேலும் சிலர் நான் ஓவராக வாய் பேசுகிறேன் என்று கூறுகிறார்கள். முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் முதலில் பாபர் அசாமின் தந்தை. அதன் பிறகு தான் பயிற்சியாளர் எல்லாம்.”
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி பைனல்: இந்தியாவுக்கு அடித்த லக்.. நியூசி. முக்கிய வீரருக்கு காயம்
“என் மகனுக்கு எல்லா நல்ல விஷயங்களையும் நான் சொல்லித் தருவேன். மற்றவர்களுக்கு அந்த தகுதி இல்லை.எனவே கொஞ்சம் பொறுமை காத்துக் கொள்ளுங்கள். கிரிக்கெட் வல்லுனர்கள் என்ற பெயரில் நீங்கள் பேசி வருவதையெல்லாம் பார்க்கவே முடியவில்லை. நீங்கள் விளையாடிய காலத்தில் எப்படி செயல்பட்டீர்கள் என்று இணையதளத்தை பார்த்தாலே தெரிந்து விடும்” என்று பாபர் அசாம் தந்தை சாடி இருக்கிறார்.