கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

AUSvsNZ.. 48 வருட உலக கோப்பை வரலாறு.. ஹெட் அதிரடி உலக சாதனை.. நியூசியை அலறவிடும் ஆஸி!

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று தரம்சாலா மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

அரையிறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்வதற்கு இரண்டு அணிகளுக்குமே இன்றைய போட்டி மிகவும் முக்கியமானது. ஆஸ்திரேலியா இந்த போட்டியில் வெல்ல வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

இந்தப் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணியில் விரலில் காயம் அடைந்திருந்த டிராவிஸ் ஹெட் கேமரூன் கிரீன் இடத்தில் மீண்டும் திரும்ப வந்தார். மேலும் நியூசிலாந்து தரப்பில் காயம் காரணமாக சாப்மேன் இடம்பெற முடியாமல் போக ஜிம்மி நீசம் இடம் பெற்றார்.

போட்டி காலையில் துவங்கி நடைபெறுகின்ற காரணத்தினால் பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும் என்று நம்பி டாஸ் வென்று நியூசிலாந்து கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர்கள் வேறொரு முடிவில் இருந்தார்கள்.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் துவக்க வீரர்களாக வந்து அதிரடியில் மிரட்டினார்கள். டேவிட் வார்னர் 28 பந்துகளில் அரை சதம் அடிக்க, டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிவேகமான அரை சதத்தை அடித்தார்.

இந்த ஜோடி பவர் பிளேவில் முதல் 10 ஓவர்களில் 10 சிக்ஸர்கள் அடித்தது. மேலும் 10 ஓவர்களில் 118 ரன்கள் குவித்து அசத்தியது. சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் முதல் விக்கட்டுக்கு 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்து, 65 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து மிகச் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 59 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உடன் அறிமுக உலகக் கோப்பை தொடரில் அதிரடியான சதத்தை பதிவு செய்தார். இறுதியாக 67 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அறிமுகப் போட்டியில் 59 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து, குறைந்த பந்துகளில் அறிமுக உலகக் கோப்பை போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்கின்ற உலக சாதனையை படைத்தார். தற்பொழுது ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மேல் எடுத்து வலிமையாக விளையாடி வருகிறது!

Published by