ஐபிஎல்லை விட உள்ளூர் கிரிக்கெட் தான் முக்கியம்.. மேத்யூ வேட் எடுத்த முடிவு.. வியப்பில் ரசிகர்கள்

0
141
Wade

இந்திய கிரிக்கெட்டில் தற்போது பெரிய பிரச்சினையாகப் பேசப்படக்கூடியதாக, இளம் வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை அளித்து, இந்திய உள்நாட்டு தொடர்களில் விளையாடாமல் புறக்கணிப்பது இருக்கிறது.

உள்நாட்டு கிரிக்கெட்டை வலிமையாக வைத்துக் கொள்ளாமல், இந்திய கிரிக்கெட்டில் எதிர்காலம் சிறப்பாக அமையாது என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவாக உணர்ந்து இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணிக்கு தேர்வாகாத வீரர்கள் மற்றும் உடல் தகுதியோடு இருக்கும் வீரர்கள் அனைவருமே தங்கள் மாநில அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

மேலும் இந்த கட்டுப்பாட்டின் படி செயல்படாத வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும், மேலும் அவர்களது ஐபிஎல் உரிமங்கள் கூட பாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் தற்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இதற்கு நேர் எதிராக ஆஸ்திரேலியாலின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் வருகின்ற 17 வது ஐபிஎல் சீசனில் முதல் இரண்டு போட்டிகளை, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடாமல் புறக்கணித்திருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான செபீல்ட் சீல்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி மார்ச் 21 முதல் 25ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் உள்நாட்டு டாஸ்மேனியா அணிக்கு விளையாடுவதற்கு மேத்யூ வேட் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக மார்ச் 25ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும், மார்ச் 27 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும், குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாட இருக்கும் போட்டியை தவற விடுகிறார். இதற்கு அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : “சர்ப்ராஸ் நீ இப்படி பண்ணாத.. பிராட்மேன் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?” – கவாஸ்கர் விமர்சனம்

இதுகுறித்து டாஸ்மேனியா அணியின் தரப்பில் “அவர் தனது ஐபிஎல் அணியுடன் பேசியிருக்கிறார். மேலும் அவரை எங்கள் அணியுடன் விளையாட விடுவதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எங்களுடைய அணிக்கு மேத்யூ வேட் போன்ற ஒருவரின் அனுபவம், பங்களிப்பு இறுதிப் போட்டியில் கிடைப்பது மிகவும் சிறப்பானது” எனக் கூறப்பட்டிருக்கிறது.