இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பாக தொடரை ஆரம்பித்துள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு இதுவே முதல் போட்டி. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்த போட்டியிலும் ஆறு நட்சத்திர வீரர்கள் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெறவில்லை. இன்றைய போட்டியில் கேப்டன் மார்ஸ், டிம் டேவிட் ஆகியோர் ஆடவில்லை. மேலும் கம்மின்ஸ், ஹேசில்வுட் காயத்தால் விலகி இருந்தார்கள். இத்துடன் ஸ்டார்க் ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி இலங்கை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. மைதானம் பெரியதாக இருப்பதோடு ஆடுகளம் மெதுவாக இருப்பதால் இங்கு ரன்கள் எடுப்பது கொஞ்சம் கடினம். இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் ஹெட் 7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜோஸ் இங்லீஷ் அதிரடியாக 17 பந்தில் 37 ரன்கள், மேட் ரென்ஷா 33 பந்தில் 37 ரன்கள், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 29 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. மார்க் அடைர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி மொத்தமாக 115 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு ஆடம் ஜாம்பா மற்றும் நாதன் எல்லீஸ் இருவரும் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : ஆசிய கோப்பையே நாங்க ஜெயிச்சிருக்க வேண்டியது.. இந்தியா போட்டியில வேற மாதிரி இருப்பேன் – பர்கான் சவால்
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு நட்சத்திர வீரர்கள் அதிக அளவில் விளையாடாத காரணத்தினால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி வராது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களே கருத்து தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இலங்கையில் உள்ள கண்டிஷனுக்கு இலங்கை அணியை விட ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.