டி20 உலககோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி.. 2 ஸ்டார் பவுலர்கள் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு

0
721

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தாலும், வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் சேர்க்கப்படவுள்ளனர்.

இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், “கம்மின்ஸுக்கு மேலும் நான்கு வாரங்களில் முதுகுப்பகுதி ஸ்கேன் செய்யப்படும். பிப்ரவரி 7 அன்று தொடங்கவுள்ள இந்தப் உலககோப்பை போட்டிக்கு அவர் பங்கேற்பது குறித்து, அந்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

கம்மின்ஸ், ஹேசல்வுட் காயம்:

கடந்த ஜூலையில் முதுகுத்தண்டு அழுத்தக் காயம் ஏற்பட்ட பிறகு, கம்மின்ஸ் ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார். அந்தக் காயத்திலிருந்து மீண்டு வர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அடிலெய்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை கைப்பற்ற உதவினார்.

34 வயதான ஹேசல்வுட் இடுப்பு மற்றும் அகில்லெஸ் தசைநார்ப் பிடிப்புக் காயங்களால் முழு ஆஷஸ் தொடரையும் தவறவிட்டார். ஆனால், தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகத் தெரிகிறது.
காயமடைவதற்கு முன்பு இந்தியாவிற்கு எதிரான வெள்ளைப் பந்துத் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய ஹேசில்வுட், டி20 உலகக் கோப்பைக்குத் திரும்புவது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும்.

- Advertisement -

டிம் டேவிட் சந்தேகம்:

“ஜோஷ் பந்துவீசத் திரும்புகிறார். அவர் சரியான நேரத்தில் தயாராகிவிடுவார் என்று தெரிகிறது,” என்று மெக்டொனால்ட் குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு மற்றொரு கவலையாக அதிரடி மிடில் ஆர்டர் பேட்டர் டிம் டேவிட் உள்ளார். சமீபத்தில் பிபிஎல் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடியபோது அவருக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது. ‘ஃபினிஷர்’ என அறியப்படும் அவர், இதேபோன்ற காயம் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்தார்.

இதையும் படிங்க: இலங்கைக்கு எதிரான டி20 தொடர்.. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ரிஸ்வான், அபிரிடி நீக்கம்

“இது வெறும் தசை அல்லது தசைநார் காயமா என்று உறுதியாகத் தெரியவில்லை, அதுதான் காலக்கெடுவைக் கொடுக்கும். டிம் டேவிட்டுக்கு காலக்கெடு சாதகமாக அமையும் என்று நினைக்கிறேன். எனவே, எந்தக் காயம் இருந்தாலும் அவர் கிடைப்பார்,” என்று மெக்டொனால்ட் தெளிவுபடுத்தினார்.ஆஸ்திரேலியா தனது டி20 உலகக் கோப்பைப் பயணத்தை பிப்ரவரி 11 அன்று அயர்லாந்திற்கு எதிராகத் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக, ஜனவரி மாதம் பாகிஸ்தானில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசத் தொடரில் விளையாடும்.

- Advertisement -