இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு 16 பேர் கொண்ட அணி அறிவிப்பு; முக்கிய துவக்க வீரர் மீண்டும் வருகிறார்

0
3735

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதற்கட்டமாக ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. அதன் பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம். 16 பேர் கொண்ட இந்த அணியில் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிய டேவிட் வார்னர் மீண்டும் வருகிறார்.

டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருந்த இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டர் ஆஸ்டன் அகர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தார். ஆனால் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சென்று உள்ளூர் போட்டிகளிலும் விளையாட உள்ளார். இவருக்கு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பார்ட்டியில் ஈடுபட்டிருந்தபோது காலில் அடிபட்டு படுகாயம் அடைந்த கிளென் மேக்ஸ்வெல் குணமடைந்து முழு உடல்தகுதியை நிரூபித்திருக்கிறார். அதனால் இந்த ஒருநாள் தொடரில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் காரணமாக விலகி இருந்த மிச்சல் மார்ஸ் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசானே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜேய் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

நடைபெற்ற வரும் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இரண்டையும் இந்திய அணி கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் மார்ச் 1 மற்றும் மார்ச் 9ஆம் தேதிகளில் துவங்குகிறது.

மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் 17, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் சென்னை மைதானங்களில் முறையே நடைபெறுகிறது.