ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் அடுத்த மாதம் திருமணம் முடிக்க இருக்கிறார். தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வினி இராமனை அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
2017 முதல் காதலித்து வரும் மேக்ஸ்வெல்
நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்துக் கொண்டு வரும் இவர்கள் வருகிற மார்ச் மாதம் 27ஆம் தேதி அன்று திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர்.இவர்கள் இருவரும் காதலிக்கும் செய்தி 2019ஆம் ஆண்டு அனைவருக்கும் தெரிய வந்தது.
2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் இவர்கள் இருவரும் இணைந்து விருது வழங்கும் விழாவை அலங்கரித்தனர். அன்று முதல் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தனித்தனியே தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வந்தனர்.
கிளென் மேக்ஸ்வெல் காதலிக்கும் பெண் பெயர் வினி இராமன். தமிழகத்தைச் சேர்ந்த ராமானுஜ தாசன் மற்றும் விஜயலட்சுமி வாமன் இவர்கள் இருவரின் மகள் தான் வினி ராமன். இவர்கள் ஆரம்பத்திலேயே குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் முறைப்படியிலான பாரம்பரிய தமிழ் பத்திரிக்கை
இவர்கள் இருவருக்கும் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து வருகிற மார்ச் மாதம் 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்கள் இருவரின் திருமண பத்திரிக்கையை நமது பாரம்பரிய தமிழ் முறைப்படி வடிவமைத்துள்ளனர்.
Glenn James Maxwell’s ( Australian professional international cricketer) marriage invitation in tamil! 🙏 pic.twitter.com/byxQOCSJFT
— Vijayakumar (@vijaycam) February 12, 2022
மஞ்சள் பத்திரிகையில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அந்தப் பத்திரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரது திருமணமும் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் வோக் பால் ரூமில் ஆஸ்திரேலிய நேரப்படி காலை 11:35 மணிக்கு மேல் 12:35 மணிக்குள் சுப மங்களகரமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.