ரிஷப் பண்ட்டை விட தொடர்ந்து 10 மேட்ச் வாய்ப்பு இவருக்கு கொடுத்து பாருங்க, அப்புறம் என்ன நடக்குதுன்னு! – ரவி சாஸ்திரி கருத்து!

0
1018

சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து பத்து போட்டிகளாவது வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார் ரவி சாஸ்திரி.

டி20 உலககோப்பைக்கு சென்ற இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்கப்படவில்லை தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் சேர்க்கப்பட்டனர். இருவருமே பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை.

- Advertisement -

டி20 உலககோப்பையை தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டபோதும், மூன்று போட்டிகளிலும் அவர் பிளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை.

ரிஷப் பன்ட் பிளேயிங் லெவனில் எடுக்கப்பட்டார். முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் 6 ரன்கள், மூன்றாவது போட்டியில் 11 ரன்கள் என மீண்டும் ஒருமுறை சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒருநாள் தொடரிலும் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதில் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. முக்கியமான கட்டத்தில் களமிறங்கி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து 38 பந்துகளில் 36 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து நல்ல பங்களிப்பை கொடுத்து வரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதை கண்டித்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும் சஞ்சு சாம்சனுக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தனது சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்திருக்கிறார் ரவி சாஸ்திரி.

“சஞ்சு சாம்சனுக்கு ஓரிரு போட்டிகள் வாய்ப்பு கொடுத்து விட்டு வெளியில் அமர்த்துவது முற்றிலும் சரியாகாது. குறைந்தபட்சம் பத்து போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு, அதன் பிறகு அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மைதானத்திற்கு மைதானம் பேட்டிங் அணுகுமுறை மாறுபடும். அதை வைத்து வீரர்களை எடைபோட முடியாது. ஆகையால் குறைந்த பட்சம் 10-15 போட்டிகள் ஆட வைத்தால்தான், எந்த மைதானத்திற்கு எப்படி இவர் ஆடுகிறார்? இந்த இடத்திற்கு சரியாக இருப்பார்? என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ரிஷப் பண்ட்டிற்கு இத்தனை வாய்ப்புகள் கொடுக்கப்படுவது தவறு இல்லை. ஆனால் அதே அளவு வாய்ப்புகளை சக வீரர்களுக்கும் கொடுத்து உங்கள் பரிசோதனையை செய்ய வேண்டும்.” என்றார்.