இலங்கை அணி தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் மீண்டும் ஒரு மெகா தோல்விக்கு மிக அருகில் இருக்கிறது.
தற்போது இலங்கை வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி ஸ்மித் தலைமையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று படுதோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி சில நாட்களுக்கு முன்பாக இலங்கை அணிக்கு பல சாதனைகளை உருவாக்கிய காலே மைதானத்தில் தொடங்கியது.
ஸ்மித் – அலெக்ஸ் கேரி அபாரம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தினேஷ் சண்டிமல் 74, குசால் மெண்டிஸ் 85 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் ஸ்மித் 131, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 156 ரன்கள் குவித்தார்கள். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 414 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியின் தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மீண்டும் சுருண்ட இலங்கை அணி
இதைத் தொடர்ந்து 157 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா 8, கருணரத்தினே 14, தினேஷ் சண்டிமல் 12, கமிந்து மெண்டிஸ் 14, தனஞ்செய டி சில்வா 23 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் தந்து வெளியேறினார்கள்.
இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்திக்கு இந்த நல்ல விஷயம் நடக்காது.. கம்பீர் நிர்வாகம் இதை விரும்பாது – ஜாகிர் கான் பேச்சு
இந்த நிலையில் ஒரு முனையில் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் நிலைத்து நின்று விளையாடி 149 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இன்று மூன்றாவது நாள் முடிவில் களத்தில் ஆட்டம் இழக்காமல் குசால் மெண்டிஸ் அதிரடியாக 50 பந்தில் 48 ரன்கள் எடுத்திருக்கிறார். இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து 54 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று இருக்கிறது. எனவே மீண்டும் ஒரு மெகா வெற்றிக்கு ஆஸ்திரேலியா அணியும், மீண்டும் ஒரு படுதோல்விக்கு இலங்கை அணியும் அருகில் இருக்கின்றன!






