ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: மகளிர் கிரிக்கெட் இறுதியில் இந்திய அணிக்கு வரலாற்றுத் தங்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ன் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணிக்குத் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்களும், ஷஃபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். இறுதிநேரத்தில் அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 49* ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் சாமுதி பிரபோதா, கவிஷா தில்ஹாரி மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது.
217 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணியில், அதிகபட்சமாக கேப்டன் சாமரி அத்தப்பத்து 21 பந்துகளில் 29 ரன்களும், கௌஷானி நுத்யங்கன 14 பந்துகளில் 14 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் வலுவான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியப் பந்துவீச்சில் தீப்தி சர்மா 4 ஓவர்களில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ஷஃபாலி வர்மா (2 விக்கெட் – 3 ரன்கள்), ஸ்ரீ சரணி (2 விக்கெட் – 13 ரன்கள்) மற்றும் சிரேயங்கா பட்டீல் (2 விக்கெட் – 9 ரன்கள்) ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி இலங்கை அணியை 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்குச் சுருட்டினர்.
இந்த மாபெரும் வெற்றியின் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது.






